சின்னம் கோரி சரத் யாதவ் அணி மனு

ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) சின்னத்தை நிதீஷ் குமார் அணிக்கு ஒதுக்கியதற்கு எதிராக சரத் யாதவ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கும், ஜேடியு எம்.பி. ராமசந்திர பிரசாத்
சின்னம் கோரி சரத் யாதவ் அணி மனு

ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) சின்னத்தை நிதீஷ் குமார் அணிக்கு ஒதுக்கியதற்கு எதிராக சரத் யாதவ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கும், ஜேடியு எம்.பி. ராமசந்திர பிரசாத் சிங்குக்கும் தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏற்கெனவே இதுதொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டுவிட்டதால், புதிதாக எந்த பதில் மனுவும் செய்யப் போவதில்லை என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்து வரும் மகா கூட்டணியின் ஆதரவுடன் பிகாரில் ஆட்சி அமைத்திருந்த ஜேடியு கட்சித் தலைவர் நிதீஷ் குமார், அங்கிருந்து விலகி பாஜகவின் உறுதுணையோடு அரசமைத்தார். இதற்கு ஜேடியு மூத்த தலைவர் சரத் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 
இதன் தொடர்ச்சியாக கட்சி பிளவுபட்டு இரு அணிகளாகச் செயல்படத் தொடங்கின. ஜேடியு கட்சிக்கும், "அம்பு' சின்னத்துக்கும் உரிமை கோரி இரு தரப்பும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன. அவற்றை விசாரித்த தேர்தல் ஆணையம், நிதீஷ் அணியே உண்மையான ஜேடியு என்று அறிவித்து அவர்களுக்கு சின்னத்தை ஒதுக்கியது. 
இதை எதிர்த்து சரத் யாதவ் தரப்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முறையான விளக்கங்கள் அளிக்காமல் சின்னத்தை நிதீஷ் அணிக்கு ஒதுக்கியிருப்பதாக அதில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அதுதொடர்பான உரிய விளக்கங்களை தேர்தல் ஆணையம் அளித்ததன் காரணமாக அந்த மனு வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்யக் கோரி சரத் யாதவ் அணியின் தலைவர் கே.ராஜசேகரன் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அது, நீதிபதி இந்தர்மீத் கெüர் முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, ஜேடியு மாநிலங்களவைத் தலைவர் ராமசந்திர பிரசாத் சிங்குக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com