தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி வழங்க வேண்டும்: தில்லி மாநாட்டில் தமிழகம் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி வழங்குவதற்கு மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழகம்
மாநாட்டில் பங்கேற்ற மின்துறை அமைச்சர்கள் பி. தங்கமணி (தமிழ்நாடு), ஆர். கமலக்கண்ணன் (புதுச்சேரி).
மாநாட்டில் பங்கேற்ற மின்துறை அமைச்சர்கள் பி. தங்கமணி (தமிழ்நாடு), ஆர். கமலக்கண்ணன் (புதுச்சேரி).

தமிழகத்திற்கு தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி வழங்குவதற்கு மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழகம் வலியுறுத்தியது.
மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சார்பில் மாநில மற்றும் யூனியன் பிரதேச மின்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஆர்.கே. சிங் தலைமை வகித்தார். இதில் தமிழகம் உள்பட 17 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் மின்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்றுப் பேசியதாவது:
மின் நுகர்வு அதிகரிப்பு: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியால் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. 
தமிழ்நாட்டில் 2011-ஆம் ஆண்டில் 200 மில்லியன் யூனிட்டாக இருந்த ஒரு நாளைய சராசரி மின் நுகர்வு, நிகழாண்டில் 320 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. மேலும், மாநிலத்தின் தற்போதைய 14,000 மெகா வாட் மின் தேவையானது 15,500 மெகாவாட் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிக இழப்பீடு குறைவு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் (டான்ஜெட்கோ) மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் ஆகியவற்றால் 2010-11-ஆம் ஆண்டில் 20.24 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பீடுகள் 2016-17-ஆம் ஆண்டில் 15.39 சதவீதமாகக் குறைந்துள்ளது. 
2013-14 ஆம் ஆண்டில் ரூ.13,985 கோடியாக இருந்த டான்ஜெட்கோ இழப்பு 2015-16-இல் ரூ. 5,787 கோடியாகக் குறைந்துள்ளது. 
மின்சார் நலத் திட்டம்: பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. விவசாயம் மற்றும் குடிசை மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம், அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் உள்பட பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
விவசாயிகள் நலன் கருதி, இலவச மின் இணைப்பு வழங்க மேற்கொள்ளப்பட்ட "தட்கல்' விரைவுத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 7,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 
காற்றாலை மின்சாரம்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியிலும் தமிழகம் முன்னோடி மாநிலகமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டின் மொத்த சூரிய ஒளி மின் சக்தி நிறுவுதிறன் 1786.48 மெகாவாட் ஆகும். காற்றாலை மின் நிறுவுதிறன் 7895.49 மெகாவாட். இதன்மூலம் காற்றாலை மின் உற்பத்திப் பட்டியலில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 
தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கும் உபரி காற்றாலை மின்சாரம் தேவைப்படும் பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக தனிப்பயன் பசுமை மின் வழித்தடத்தை விரைவில் செயல்படுத்த மத்திய மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகுகள் 1 மற்றும் 2-இன் மொத்த மின் நிறுவு திறனான 2,000 மெகாவாட்டில் 1,125 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் ஒதுக்கீடு மின்சாரம் முழுமையாக இதுவரை கிடைக்கப் பெறவில்லை. 
இந்நிலையில், அலகுகள் 3 மற்றும் 4-இன் மொத்த மின் உற்பத்தியான 2,000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். சென்னையில் மேல்நிலை மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்றும் பணிக்கு ரூ.3,200 கோடியை விரைந்து ஒதுக்க வேண்டும்.
நிலக்கரி ஒதுக்கீடு: அனைத்து மின்உற்பத்தி நிலையங்களும் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக உள்நாட்டு நிலக்கரியை பயன்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியது. 
இதன்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டது. உள்நாட்டு நிலக்கரி நிறுவனங்களிலிருந்து பெறப்படும் நிலக்கரி, தேவையை சமாளிக்க போதுமானதாக இல்லை. எனவே, நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
இதைத் தவிர்க்கும் வகையில், இந்திய நிலக்கரி நிறுவனத்திடம் (சிஐஎல்) இருந்து தினமும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதற்கும், ரயில்வே துறையிடமிருந்து 20 ரயில் ரேக்குகள் ஒதுக்கீடு செய்வதற்கும் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக எரிசக்தித் துறை முதன்மைச் செயலர் விக்ரம் கபூர், புதுச்சேரி மின்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மின்துறை அமைச்சர்கள், செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com