யஷ்வந்த் சின்ஹாவின் போராட்டம் அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: சிவசேனை

விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக அதிருப்தித் தலைவர் யஷ்வந்த் சின்ஹா நடத்திய போராட்டம் மகாராஷ்டிர அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று சிவசேனை தெரிவித்தது.
யஷ்வந்த் சின்ஹாவின் போராட்டம் அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: சிவசேனை

விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக அதிருப்தித் தலைவர் யஷ்வந்த் சின்ஹா நடத்திய போராட்டம் மகாராஷ்டிர அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று சிவசேனை தெரிவித்தது.
இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான "சாம்னா'வில் வியாழக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மகாராஷ்டிரத்தின் அகோலா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக 3 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு பலதரப்புகளிலிருந்து ஆதரவு கிடைத்து வந்தது. சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவும் கடந்த செவ்வாய்க்கிழமை அவரைத் தொடர்புகொண்டு பேசி தனது ஆதரவைத் தெரிவித்தார். யஷ்வந்த் சின்ஹா அரசு அதிகாரியாக சேவை புரிந்து அரசியல்வாதியானவர். அவருக்கு விவசாயிகள் ஆதரவு இருக்கிறது என்றால், இந்தப் போராட்டம் பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிர அரசுக்கு விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
அகோலா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசும், மகாராஷ்டிர அரசும் விவசாயிகள் சந்தித்த பிரச்னைகள் எதையாவது இதுவரை தீர்த்து வைத்திருக்கிறதா?
விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்துவதற்கு முன்பே விளம்பரத்துக்காக பல கோடி ரூபாயை மகாராஷ்டிர அரசு செலவழித்தது என்பதுதான் நிதர்சனம். உத்தவ் தாக்கரே தொடர்ந்து வலியுறுத்தி வந்த காரணத்தால், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. எனினும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டிமுடிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு அதை செயல்படுத்தாமல் இருப்பது போலவே இந்த அறிவிப்பும் முடங்கிக் கிடக்கிறது.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு சிவசேனை தொடர்ந்து வலியுறுத்தும்.
காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜகவை யஷ்வந்த் சின்ஹா அவ்வப்போது எதிர்த்து வருகிறார் என்று பரவலாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அது உண்மையாக இருந்திருந்தால், அகோலாவில் அவருக்கு பிரமாண்ட ஆதரவு கிடைத்தது எப்படி?
மாநில முதல்வர் ஃபட்னவீஸýம், வருவாய்த் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலும் அவரிடம் போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டியது ஏன்? இதற்குக் காரணம், இந்தப் போராட்டத்தால் எதிர்வரும் சட்டப்பேரவைக் குளிர்கால கூட்டத் தொடர் பாதிக்கப்படும் என்பதுதானே தவிர வேறு எதுவும் இருக்க முடியாது என்று "சாம்னா' தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முதல்வர் ஃபட்னவீஸýடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, யஷ்வந்த் சின்ஹா போராட்டத்தை புதன்கிழமை முடித்துக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com