ரூபாய் நோட்டு வாபஸ் போன்ற தவறுகளை மோடி எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும்: மன்மோகன் சிங்

ரூபாய் நோட்டு வாபஸ் போன்ற மிகப்பெரிய தவறுகளை பிரதமர் நரேந்திர மோடி எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
ரூபாய் நோட்டு வாபஸ் போன்ற தவறுகளை மோடி எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும்: மன்மோகன் சிங்

ரூபாய் நோட்டு வாபஸ் போன்ற மிகப்பெரிய தவறுகளை பிரதமர் நரேந்திர மோடி எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பல்வேறு தொழில் துறை நிபுணர்கள் உள்ளிட்டோரை மன்மோகன் சிங் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையானது நாட்டுக்கு பேரழிவாக உள்ளது. இதுபோன்ற மிகப்பெரிய தவறுகளை நாம் எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் . ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை அமலில் இருந்தபோது மிகப் பெருமளவிலான கருப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டது. இந்த நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோனதோடு, புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை.
ரூபாய் நோட்டு வாபஸின் விளைவாக வங்கிகள் முன்பும் ஏடிஎம் மையங்கள் முன்பும் வரிசையில் காத்திருந்தபோது உயிரிழந்த 100-க்கும் மேற்பட்டோரை நினைவுகூர்கிறேன். இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8 என்பது இந்தியப் பொருளாதாரத்துக்கும், நமது ஜனநாயகத்துக்கும் ஒரு கருப்பு தினம் என்பதை வேதனையோடு குறிப்பிடுகிறேன்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கநிலை சரிசெய்யப்பட்டு விட்டது என்று இப்போதே முடிவு கட்டுவது சரியாக இருக்காது. ஏனெனில், ஜூலை-செப்டம்பர் என்ற காலாண்டில் 6.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டது என்ற மதிப்பீடானது சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையைக் கவனத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்டதாகும். இந்தத் துறையானது ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குப் பிறகு மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தது.
ராஜ்கோட் மற்றும் குஜராத் மக்கள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்தனர். 
தங்கள் தியாகமானது இந்தியாவுக்குப் பயனளிக்கும் என்று அவர்கள் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை நம்பிக்கையுடன் நோக்கினர். ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போனது. பிரதமர் குஜராத் மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்து விட்டார். 
மற்ற யாரையும் விட குஜராத்தையும், ஏழைகளையும் தாம் நன்கு புரிந்து வைத்திருப்பதாக மோடி கூறிக் கொள்கிறார். அப்படியானால், தாம் எடுக்கும் முடிவுகள் ஏற்படுத்தும் வலியை அவர் எப்போதுமே புரிந்து கொள்ளாமல் 
இருப்பது எப்படி? என்றார் மன்மோகன் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com