விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும் மனைவிக்கும் ஜீவனாம்சம்: உச்ச நீதிமன்றம்

விவாகரத்து பெறாமல், நீதிமன்ற உத்தரவுப்படி கணவரை பிரிந்து வாழும் மனைவிக்கும் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும் மனைவிக்கும் ஜீவனாம்சம்: உச்ச நீதிமன்றம்

விவாகரத்து பெறாமல், நீதிமன்ற உத்தரவுப்படி கணவரை பிரிந்து வாழும் மனைவிக்கும் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிகார் மாநிலத்தில் கணவரைப் பிரிந்து வாழும் பெண் ஒருவர், ஜீவனாம்சம் கோரி, விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பெண்ணுக்கு அவரது கணவர் மாதந்தோறும் ரூ.4,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 
அந்த உத்தரவை எதிர்த்து, அவரது கணவர், பாட்னா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜீவனாம்சம் பெற மனைவிக்கு உரிமை கிடையாது என்று கடந்த 2014-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, அந்தப் பெண், உச்ச நீதிமன்றத்தை நாடினார். அவரது மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மதன் பி.லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அந்தப் பெண்ணின் கணவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடுகையில், ""நீதிமன்ற உத்தரவுப்படி பிரிந்து வாழும் அந்தப் பெண்ணுக்கு கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோர உரிமை கோர முடியாது'' என்றார்.
அவரது வாதத்துக்கு மறுப்பு தெரிவித்து நீதிபதிகள் கூறியதாவது:
விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இருக்கும்போது, நீதிமன்ற உத்தரவுப்படி கணவரைப் பிரிந்து வாழும் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது என்று கூறுவதற்கு காரணம் ஏதும் கிடையாது.
இந்த வழக்கில், அந்தப் பெண்ணைக் கவனித்துக் கொள்வதற்கு உறவினர்கள் யார் இருக்கிறார்கள்? என்று கீழமை நீதிமன்றம் விசாரிக்கவில்லை. எனினும், உயர் நீதிமன்றம் விசாரித்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, அந்தப் பெண்ணுக்கு அவரது கணவர், கடந்த 9 ஆண்டுகளாக ஜீவனாம்சம் தரவில்லை என்று மனுதாரரின் வழக்குரைஞர் முறையிட்டார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடும்போது, அவர்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுவதற்கு சிறிது காலம் சேர்ந்து வாழுமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இதேபோல், சேர்ந்து வாழ முடியாத பட்சத்தில், இருவரும் சிறிது காலம் பிரிந்து வாழும்படி நீதிமன்றம் உத்தரவிடும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குப் பிறகு, இருவருக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை அறிவதற்கு இருவரையும் அழைத்து நீதிமன்றம் விசாரிக்கும். இந்த காலகட்டத்தில் இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும், அவர்கள் விவாகரத்து பெறாதவர்களாகவே கருதப்படுவர். அவர்கள் விவகாரத்து பெற வேண்டுமெனில், இருவரும் புதிதாக மனு தாக்கல் செய்ய வேண்டும்.
மேற்கண்ட வழக்கில், மனைவியை விவாகரத்து செய்தால், அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியிருக்கும் என்று கருதியே, அவரது கணவர் விவாகரத்து செய்யாமல் இருந்தது வந்ததாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com