பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது: 2018ல் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

உலக அளவில் நிலநடுக்கம் பற்றிய செய்திகள் அன்றாட நிகழ்வுகளில் இடம்பெறத் தொடங்கியிருக்கும் நிலையில், 2018ல் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது: 2018ல் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை


உலக அளவில் நிலநடுக்கம் பற்றிய செய்திகள் அன்றாட நிகழ்வுகளில் இடம்பெறத் தொடங்கியிருக்கும் நிலையில், 2018ல் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

காஷ்மீரில் நிலநடுக்கம், ஜார்க்கண்டில் லேசான நிலநடுக்கம் என்று தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் போல செய்திகள் வெளியாகின்றன. 

இது தற்போதைய செய்தியாக நின்றுவிடவில்லை, 2018ம் ஆண்டில் உலக அளவில் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தரும் செய்தியையும் கொசுறு தகவலாக சேர்த்துக் கொண்டுள்ளது. 

அமெரிக்காவில் கொலரடோ பௌல்டர் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வாளர் ரோஜர் பில்ஹாம் நடத்திய ஆய்வில் கிடைத்திருக்கும் தகவலும், ரெபேக்கா பென்டிக் பல்கலைக்கழகத்தின் மொன்டானா ஆராய்ச்சிகளும், வரும் ஆண்டில் நிலநடுக்கத்தின் தாக்கம் பற்றி எடுத்துரைக்கின்றன.

அமெரிக்க விஞ்ஞானிகள் இது குறித்துக் கூறியிருப்பது என்னவென்றால், பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக, நிலநடுக்கங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதாவது, பூமியின் சுழற்சி வேகத்தில் மிக மிகக் குறைந்த அளவில் அதாவது ஒரு நாளில்  ஒரு மில்லியன் செகண்ட் அளவுக்கு மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பூமிக்குக் கீழேயான ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, இந்திய நிலப்பரப்பின் கீழ் இருக்கும் பூமித் தட்டு சிறிது சிறிதாக ஐரோப்பிய நிலப்பரப்பின் கீழ் இருக்கும் தட்டுகளுக்குக் கீழ் நோக்கி நகர்ந்து வருகிறது. இது ஆண்டுக்கு 47 மி.மீ. என்ற அளவில் நிகழ்கிறது. இந்த காரணங்களால், பூமிக்குக் கீழ் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் காரணமாக பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

கடைசியாக 2011ம் ஆண்டில் பூமியின் சுழற்சி வேகத்தில் மிகச் சிறிய மாற்றம் ஏற்பட்டு, பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அடுத்தாக இது 2016 அல்லது 2017ல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2017ல் இதுவரை எந்த பெரிய நிலநடுக்கமும் தாக்கவில்லை என்பதால், 2018 அதிகம் கவனிக்கப்பட வேண்டியதாகியுள்ளது. 

அடுத்த ஆண்டில் உலக அளவில் குறிப்பிடத்தக்க வகையில் நிலநடுக்கம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 2017ல் மிகப் பெரிய நிலநடுக்கங்கள் என்று 6 நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. ஆனால் 2018ல் இது 20 ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புவிப்புறவியலில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமே நிலநடுக்கங்களுக்குக் காரணமல்ல. உதாரணமாக சுரங்கம் வெட்டுதல், அணு ஆயுதச் சோதனை, நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறுஞ்சுதல் போன்ற மனிதன் செய்யும் இயற்கைக்கு எதிரான செயல்களும் கூட நிலநடுக்கங்களுக்குக் காரணமாக அமைகின்றன. அதாவது, கடந்த கால வரலாறுகளைப் புரட்டினால், 149 ஆண்டுகளில் சுமார் 728 நிலநடுக்கங்கள் மனிதனின் தவறான நடவடிக்கைகளால் ஏற்பட்டவையே என்று புள்ளி விவரம் சொல்கிறது.

மேலும், எண்ணெய் வளங்களைத் தோண்டி எடுத்தல், சரியான திட்டமிடல் இன்றி அணைகளைக் கட்டி நீர் தேக்குதல் போன்றவற்றினாலும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கச் செய்கின்றன.

பூமியின் குளிரும் தன்மையாலும், பூமியின் மேலோடுகளில் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் எரிமலை வெடிப்புகளும், நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன என்கிறது புள்ளி விவரங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com