கணவன் இடத்தில் காதலனைக் கொண்டு வர ஆசிட் ஊற்றி காதலன் முகத்தைச் சிதைத்த பெண்: உறைய வைக்கும் உண்மைச் சம்பவம்! 

கணவன் இடத்தில் தன் காதலன் முகத்தினை 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து கொண்டு வர எண்ணிய பெண் ஒருவர், காதலன் முகத்தினை ஆசிட் ஊற்றி சிதைத்த, உறைய வைக்கும் உண்மைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கணவன் இடத்தில் காதலனைக் கொண்டு வர ஆசிட் ஊற்றி காதலன் முகத்தைச் சிதைத்த பெண்: உறைய வைக்கும் உண்மைச் சம்பவம்! 

ஹைதராபாத்: கணவன் இடத்தில் தன் காதலன் முகத்தினை 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து கொண்டு வர எண்ணிய பெண் ஒருவர், காதலன் முகத்தினை ஆசிட் ஊற்றி சிதைத்த, உறைய வைக்கும் உண்மைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இம்மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வாதி என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக சுதாகர் ரெட்டி என்பவரோடு திருமணம் நிகந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ஸ்வாதிக்கு ராஜேஷ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது இருவருக்கும் இடையேயான தகாத உறவாக மாறியுள்ளது. இதன் விளைவாக இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ விரும்பினர்.அதற்குத் தடையாக இருக்கும் சுதாகர் ரெட்டியை கொலை செய்ய முடிவு செய்தனர்.

அப்பொழுது ஸ்வாதி ஒரு திட்டம் தீட்டினார். 2014-ஆம் ஆண்டு வெளியான தெலுஙகுப் படம் 'எவடு'. அப்படத்தில் ஒரு நாயகனான அல்லு அர்ஜன் தன்னுடைய முகத்தினை 'பிளாஸ்டிக் சர்ஜரி' மூலம் உருமாற்றிக் கொண்டு,மற்றொரு நாயகனான ராம்சரண் போல் மாறுவார். அதே போல ராஜேஷின் முகத்தினை சுதாகர் ரெட்டியின் முகத்தினை ஒத்ததாக 'பிளாஸ்டிக் சர்ஜரி' மூலம் மாற்ற ஸ்வாதி  திட்டமிட்டார். 

தங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக 26.11.2017 அன்று இருவரும் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த சுதாகர்  ரெட்டியினை தலையில் அடித்துக் கொன்றனர். பின்னர் அவரது உடலை பதேபூர் மண்டல் பகுதியில் உள்ள மைசமா காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று எரித்தனர்.

பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ராஜேஷின் முகத்தில் ஸ்வாதி ஆசிட்டினை ஊற்றி முகத்தினைச் சிதைத்துள்ளார். வீட்டாரிடம் ஹைதராபாத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சுதாகரின் முகத்தில் ஆசிட் வீசியதாக நம்பும்படி நாடகமாடி அவர்களை ஏமாற்றியுள்ளார். ஸ்வாதியின் பேச்சை நம்பிய அவர்களும், தனியார் மருத்துவமனை ஒன்றில் சுதாகராக இருக்கும் ராஜேஷினை சேர்த்து, அவருக்கு சிகிச்சையினைத் தொடங்கியிருக்கின்றனர்.

அவரது 'பிளாஸ்டிக் சர்ஜரி' ஆரம்ப கட்ட சிகிச்சைக்காக ருபாய் ஐந்து லட்சம் வரையிலும் அவர்கள் செலவும் செய்தனர். பின்னர் சிகிச்சை நடக்கத் துவங்கிய சமயத்தில், சுதாகரின் தாயாருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 'நாபர் மீது சந்தேகம் வந்துள்ளது. அவர் உடனடியாக போலீசிடம் புகார் செய்ய, ஸ்வாதி கைது செய்யப்பட்டார்.       

நாகர்குர்நூல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜோகு சென்னையா தலைமையில் நடந்த விசாரணையில் ஸ்வாதி தன்னுடைய குற்றத்தினை ஒத்துக் கொண்டார். 'எவடு' பட பாணியில் இதனைத் திட்டமிட்டதாகவும் அவர் கூறினார். அவரது உதவியுடன் மைசமா காட்டுப் பகுதியில் இருந்து, சுதாகரின் உடலின் எரிந்த மிச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராஜேஷ் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com