அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஏன்  கட்டுக்கதைகளை கூறுகிறீர்கள்?: மோடியை விமர்சித்த சொந்தக்கட்சி நடிகர்! 

தேர்தலில் ஜெயிப்பதற்காக அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஏன்  கட்டுக்கதைகளை கூறுகிறீர்கள் என்று பிரதமர் மோடியை, பாரதிய ஜனதா கட்சி எம்.பியும் நடிகருமான சத்ருக்கன் சின்ஹா விமர்சித்துள்ளார்.   
அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஏன்  கட்டுக்கதைகளை கூறுகிறீர்கள்?: மோடியை விமர்சித்த சொந்தக்கட்சி நடிகர்! 

புதுதில்லி: தேர்தலில் ஜெயிப்பதற்காக அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஏன்  கட்டுக்கதைகளை கூறுகிறீர்கள் என்று பிரதமர் மோடியை, பாரதிய ஜனதா கட்சி எம்.பியும் நடிகருமான சத்ருக்கன் சின்ஹா விமர்சித்துள்ளார்.   

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள பலன்பூர் என்னுமிடத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர், தன்னை நீசன் எனக் குறிப்பிட்ட ஒரு நாளுக்கு முன், தில்லியில் உள்ள அவரது வீட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் 3 மணி நேரம் சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்தார்.

அதேபோல் பாகிஸ்தான் தூதரை மணிசங்கர் அய்யர் பலமுறை ரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். சோனியா காந்தியின் செயலாளரான அகமது பட்டேலை குஜராத்தின் முதல்வராக்க வேண்டும் எனப் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் கூற வேண்டிய காரணம் என்ன என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது சந்தேகம் எழாமல் இருக்குமா? என்று மோடி கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக, நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் பாஜகவினைச் சேர்ந்தவரும், பிகாரின் பாட்னா சாஹிப் தொகுதி எம்.பியுமான நடிகர் சத்ருக்கன் சின்ஹா பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வரிசையாக தெரிவித்திருந்த கருத்துக்களாவது:

சார், தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, அதுவும் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் இதுபோன்ற உறுதிப்படுத்த இயலாத, நம்ப முடியாத கதைகளை எதிரிகளை நோக்கி தினந்தோறும் கூற வேண்டியது அவசியமா?

அதுவும் தற்பொழுது அவ்வாறு கூறிய கதைகளுடன் பாகிஸ்தான் தூதர், ராணுவத் தளபதி எல்லாரையம் இணைப்பது என்பது....பிரமாதம்   ..!

இது போல சூழலை மத மயமாக்குவதை விடுத்து, 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது நாம் கொடுத்த வாக்குறுதிகளான வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட கொள்கைகளில் கவனம் செலுத்தி, ஆரோக்கியமான தேர்தல் நடக்க உழைக்கலாம்.

இவ்வாறு சத்ருக்கன் சின்ஹா தெரிவித்துள்ளார். 

சமீப காலங்களில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் மோடியை நடிகர் சத்ருக்கன் சின்ஹா  தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com