உயர் நீதிமன்றங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 6 லட்சம் வழக்குகள் தேக்கம்

நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 6 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்திருக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 6 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்திருக்கின்றன. இதில் அதிகபட்சமாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மட்டும் ஒரு லட்சம் வழக்குகள் விசாரணை நடத்தப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன.
இதுதொடர்பாக தேசிய நீதித்துறை புள்ளி விவர ஆணையத்திடம் இருக்கும் தகவல்கள் தெரிவிப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள 24 உயர் நீதிமன்றங்களிலும் கடந்த 2016ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி, 40.15 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்து கிடக்கின்றன. அந்த வழக்குகளில், 19.45 சதவீத வழக்குகள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலத்தில் தேக்கமடைந்து கிடக்கும் வழக்குகள் ஆகும்.
இதில் 20 உயர் நீதிமன்றங்களில் மட்டும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி நிலவரப்படி, 5,97,650 வழக்குகள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலமாக தேக்கமடைந்து கிடக்கின்றன.
மும்பை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 1,29,063 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. அவற்றில் 96,596 வழக்குகள் சிவில் சம்பந்தப்பட்டவை; 12,846 வழக்குகள் குற்ற விவகாரம் தொடர்புடையவை. 19,621 வழக்குகள் ரிட் மனுக்கள் ஆகும்.
இந்தப் பட்டியலில், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் 2ஆவதாக உள்ளது. அந்த உயர் நீதிமன்றத்தில் 99,625 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. அதில் 64,967 வழக்குகள் சிவில் விவகாரம் தொடர்புடையவை. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் 74,315 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 40,529 வழக்குகள் சிவில் விவகாரம் சம்பந்தப்பட்டவை ஆகும்.
24 உயர் நீதிமன்றங்களில் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்த புள்ளி விவரங்கள் இல்லை. அதன் புள்ளி விவரமும் இருந்தால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.
உயர் நீதிமன்றங்களில் தேக்கமடைந்து கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை, கடந்த 2014ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி 41.52 லட்சமாக இருந்தது. அந்த எண்ணிக்கை, கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பரில் 38.70 லட்சமாகக் குறைந்தது. அதேநேரத்தில், இந்த எண்ணிக்கை 2016ஆம் ஆண்டு இறுதியில் 40.15 லட்சமாக அதிகரித்தது என்று தேசிய நீதித்துறை புள்ளி விவர ஆணையத்திடம் இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com