குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல்: சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை ஒத்திப் போட்ட எண்ணெய் நிறுவனங்கள்

குஜராத் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, சமையல் எரிவாயு உருளை விலையில் மாதந்தோறும் மேற்கொண்டு வரும் உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் ஒத்திப் போட்டுள்ளன.
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல்: சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை ஒத்திப் போட்ட எண்ணெய் நிறுவனங்கள்

குஜராத் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, சமையல் எரிவாயு உருளை விலையில் மாதந்தோறும் மேற்கொண்டு வரும் உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் ஒத்திப் போட்டுள்ளன.
சமையல் எரிவாயு உருளைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மானியத்தை படிப்படியாக 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுவதும் நிறுத்திக் கொள்வதென்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, மாதந்தோறும் அதன் மீதான விலையை உயர்த்தும்படி எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கேட்டுக் கொண்டது.
இதன்படி, மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மாதந்தோறும் 1ஆம் தேதியன்று சமையல் எரிவாயு உருளை மீதான விலையை கடந்த 17 மாதங்களாக உயர்த்தி வந்தன. 
இதுபோல், கடந்த 17 மாதங்களில் சமையல் எரிவாயு உருளை மீதான விலை ரூ.76.50 உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நிகழ்மாதத்தில் ( டிசம்பர்) 1-ஆம் தேதி சமையல் எரிவாயு உருளை மீதான விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால், குஜராத் மாநில சட்டப் பேரவைக்கு தற்போது 2 கட்டங்களாகத் தேர்தல் நடப்பதால் அந்த நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் ஒத்திப் போட்டுள்ளன.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "உண்மைதான்; நிகழ் மாதத்தில் சமையல் எரிவாயு உருளை மீதான விலையை நாங்கள் சீரமைப்பு செய்யவில்லை' என்றார். 
குஜராத் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடப்பதால், விலை சீரமைப்பு நடவடிக்கையைக் கைவிடும்படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதா? என்று அந்த அதிகாரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுதோறும் 12 சமையல் எரிவாயு உருளைகள் மானிய விலையில் அளிக்கப்படுகின்றன. அதன்பிறகு வாங்கப்படும் சமையல் எரிவாயு உருளைகள், சந்தை விலையில் வழங்கப்படுகின்றன. தற்போது ஒவ்வொரு சமையல் எரிவாயு உருளைக்கும் ரூ.251.31 மானியமாக அளிக்கப்படுகிறது. இந்தத் தொகையானது, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் எண்ணெய் நிறுவனங்களால் நேரடியாக செலுத்தப்படுகிறது.
நாடு முழுவதும் தற்போது 18.11 கோடி பேர் சமையல் எரிவாயு உருளையை மானிய விலையில் பயன்படுத்துகின்றனர். அவர்களில் மத்திய அரசுத் திட்டத்தின்கீழ் இலவச சமையல் எரிவாயு பெற்ற 3 கோடி ஏழைப் பெண்களும் அடங்குவர். இதுதவிர, 2.66 கோடி வாடிக்கையாளர்கள், மானியம் வேண்டாம் என்று தாங்களே முன்வந்து விட்டுக் கொடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com