குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு: மோடி

குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாகவும்; பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரிகள் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் ரகசிய சதி ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பான
குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு: மோடி

குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாகவும்; பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரிகள் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் ரகசிய சதி ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
இக்கூட்டத்தில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் பங்கேற்றனர் என்று மோடி கூறியுள்ளது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு என்ன அக்கறை: குஜராத் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள பனஸ்கந்தா மாவட்டம், பாலன்பூரில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற மோடி பேசியதாவது:
பாகிஸ்தான் ராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் குஜராத் தேர்தல் குறித்து மிகுந்த அக்கறையுடன் பேசியுள்ளார். முக்கியமாக காங்கிரஸ் தலைவர் அகமது படேல் குஜராத் மாநில முதல்வராக வேண்டுமென்று பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் ஜெனரல் சர்தார் அர்ஷத் ரஃபீக் விருப்பம் தெரிவித்துள்ளார். இது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகின்றன. இதற்கு காங்கிரஸ் கட்சி உரிய பதிலளித்தாக வேண்டும்.
அன்சாரி, மன்மோகன் மீது குற்றச்சாட்டு: காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வீட்டில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு ரகசிய சதி ஆலோசனைக் கூட்டம் குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. அக்கூட்டத்தில், பாகிஸ்தான் தூதர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர், இந்தியாவின் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் (ஹமீது அன்சாரி), முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். 
ரகசியக் கூட்டம் நடத்தியது ஏன்?: இதற்கு அடுத்த நாளில் என்னைப் பற்றி தரக்குறைவான விமர்சனத்தை மணிசங்கர் அய்யர் முன்வைத்தார். இந்த ரகசியக் கூட்டம் மிகவும் முக்கியமான பிரச்னையாகும். குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற ரகசியக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்த வேண்டிய அவசியம் என்ன? இதற்கு காங்கிரஸ் கட்சி உரிய பதிலளிக்க வேண்டும். 
இந்தக் கூட்டத்துக்குப் பிறகுதான், குஜராத் மக்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், ஏழை மக்களும், மோடியும் அவமதிக்கப்பட்டனர். இதுபோன்ற நிகழ்வுகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பது காங்கிரஸýக்குத் தெரியாதா? எனவே இந்த விவகாரத்தில், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து, நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி விளக்க வேண்டும் என்றார் மோடி.
உருளைக் கிழங்குக்குப் பதில் தங்கம்?: முன்னதாக பனஸ்கந்தா மாவட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஒரு பக்கத்தில் உருளைக் கிழங்கை செலுத்தினால், மறுபக்கம் வழியாக அதனைத் தங்கமாக மாற்றித் தரும் இயந்திரத்தை பனஸ்கந்தாவில் பொருத்த இருக்கிறேன்' என்று உதாரணம் கூறி அத்தகைய வளர்ச்சியை அந்த மாவட்டத்தில் ஏற்படுத்த இருப்பதாகப் பேசினார்.
இதனைச் சுட்டிக் காட்டிப் பேசிய மோடி, "உருளைக் கிழங்குகளை இயந்திரம் மூலம் தங்கமாக மாற்றித் தருவதாக ராகுல் காந்தி தனது வார்த்தை ஜாலத்தை இங்கு காட்டியுள்ளார். 
பனஸ்கந்தா பகுதியில் விவசாயிகளின் கடின உழைப்பால் அமோகமான உருளைக் கிழங்கு விளைச்சலைப் பெற்று வருகின்றனர் என்பது நமது தேசத்துக்கே தெரியும். ஆனால், உருளைக் கிழங்கு ஏதோ தொழிற்சாலையில் விளையும் பொருள் என ராகுல் காந்தி நினைத்துக் கொண்டிருக்கிறார்.
மண்ணில் இறங்கி கடினமாக உழைப்பதன் மூலம்தான் உருளைக் கிழங்கை விளைவிக்கிறீர்கள் என்பதை தேர்தலில் தோற்கடிப்பதன் மூலம் காங்கிரஸýக்கு நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்றார் அவர்.
உங்களில் ஒருவன்: கடந்த 2012-ஆண்டு ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில், 6 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. இதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய மோடி, "குஜராத் மாநிலம் முழுமையாக நரேந்திர மோடியின் பக்கம் இருந்தபோது இந்த மாவட்டம் மட்டும் காங்கிரஸிடம் இருந்தது. கடந்த தேர்தலில் பெற்ற இழப்புக்கும் சேர்ந்து இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் இந்த முறை பாஜக வெற்றி பெற இருக்கிறது. 
குஜராத்தில் நான் எங்கு சென்றாலும் என்னை பிரதமராகப் பார்ப்பது இல்லை. நரேந்திர மோடி தங்களில் ஒருவன் என்றுதான் பார்க்கிறார்கள் என்றார் மோடி.
முன்னதாக, சானந்த் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com