சக வீரர்களைக் கொன்ற சிஆர்பிஎஃப் வீரர்: தாயைப் பார்க்க விருப்பம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னுடன் பணியாற்றும் சக வீரர்கள் 4 பேரை சுட்டுக் கொன்ற சிஆர்பிஎஃப் வீரர் சனத் குமார், கவலைக்கிடமான நிலையில் இருக்கும் தனது தாயை பார்க்க விரும்பியுள்ளார்.
சக வீரர்களைக் கொன்ற சிஆர்பிஎஃப் வீரர்: தாயைப் பார்க்க விருப்பம்


ஆக்ரா: சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னுடன் பணியாற்றும் சக வீரர்கள் 4 பேரை சுட்டுக் கொன்ற சிஆர்பிஎஃப் வீரர் சனத் குமார், கவலைக்கிடமான நிலையில் இருக்கும் தனது தாயை பார்க்க விரும்பியுள்ளார்.

35 வயதாகும் சனத் குமாரின் தாய் சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழப்பதற்கு முன்பு அவரைப் பார்க்க சனத் விரும்பியுள்ளார்.

ஆனால், அவருக்கு விடுமுறை மறுக்கப்பட்ட விரக்தியில் இருந்தபோது, சக வீரர்களுக்கு இடையேயான வாக்குவாதத்தின்போது இந்த விபரீத செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எந்த காரணத்துக்காக இந்த படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் கொலை செய்ததை நியாயப்படுத்த முடியாது. விசாரணை நடைபெற்று வருவதாக சிஆர்பிஎஃப் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி: பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பசகுடா என்ற இடத்தில் நக்ஸல் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்காக துணை ராணுவப் படையினர் முகாமிட்டுள்ளனர். அந்த முகாமில், சனிக்கிழமை மாலை 5 மணியளவில்  சிஆர்பிஎஃப் வீரர்கள் 4 பேரை, சக வீரர் ஒருவரே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தண்டேவாடா சரக டிஐஜி சுந்தர்ராஜ் கூறியதாவது:
அந்த முகாமில் தங்கியிருந்த சனத் குமார்(35) என்ற காவலர், தான் வைத்திருந்த ஏகே-47 ரக துப்பாக்கியால், சக வீரர்கள் 5 பேரை சுட்டுள்ளார்.

இதில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த வீகே சர்மா(34), குஜராத்தைச் சேர்ந்த மேக் சிங்(52), ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ்வீர் சிங் (48), ஆந்திரத்தைச் சேர்ந்த ஜி.சங்கரராவ்(37) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஹரியாணாவைச் சேர்ந்த கஜானந்த் (49) பலத்த காயம் அடைந்தார். அவர், உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ராய்ப்பூருக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உயிரிழந்தவர்களின் உடல்களும் ராய்ப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

முன்னதாக, அந்த முகாமில் சனத் குமாருக்கும், உடன் தங்கியிருந்த சக வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அவரை அவர்கள் மிரட்டி, தாக்கியிருக்கிறார்கள். அதன்பிறகே, அவர்களை சனத் குமார் தனது துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று சுந்தர்ராஜ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com