திரிணமூலில் இருந்து விலகிய 6 பேர் பாஜக எம்எல்ஏக்களாக அங்கீகரிப்பு

திரிபுரா மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 6 பேர், அக்கட்சியின் எம்எல்ஏக்களாக அங்கீகரிக்கப்பட்டனர். 

திரிபுரா மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 6 பேர், அக்கட்சியின் எம்எல்ஏக்களாக அங்கீகரிக்கப்பட்டனர். 
இந்தத் தகவலை, சட்டப் பேரவைச் செயலர் பி.மஜூம்தார், ஞாயிற்றுக்கிழமை கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
6 எம்எல்ஏக்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஏற்கப்பட்டன. அவர்கள் அனைவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனான உறவை முற்றிலுமாக முறித்துக் கொண்டு பாஜகவில் இணைந்து விட்டதை சட்டப் பேரவைத் தலைவர் ராமேந்திர தேவ்நாத் சனிக்கிழமை உறுதிசெய்தார். எனவே, அவர்கள் 6 பேரும், பாஜக உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டனர் என்றார் பி.மஜூம்தார்.
இதையடுத்து, 60 உறுப்பினர்களைக் கொண்ட திரிபுரா சட்டப் பேரவையில், ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கு 51 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 3 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 6 உறுப்பினர்களும் உள்ளனர்.
அந்த மாநிலத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக வேட்பாளர் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. 
இதனிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதீப் ராய் பர்மன், ஆஷிஸ் குமார் சஹா, தீப சந்திர ராங்காவல், விஸ்வ பந்து சென், பிரஞ்சித் சிங்கா ராய், திலீப் சர்கார் ஆகிய 6 எம்எல்ஏக்களும், கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும், நிகழாண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி, திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com