தில்லி - மும்பை விமானத்தில் நடிகை சாய்ரா வசீமுக்கு பாலியல் தொந்தரவு

தில்லியில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற விமானத்தில் சக பயணியால் தாம் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக பிரபல பாலிவுட் நடிகை சாய்ரா வசீம், மும்பை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
தில்லி - மும்பை விமானத்தில் நடிகை சாய்ரா வசீமுக்கு பாலியல் தொந்தரவு

தில்லியில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற விமானத்தில் சக பயணியால் தாம் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக பிரபல பாலிவுட் நடிகை சாய்ரா வசீம், மும்பை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விகாஷ் சச்தேவ் (39) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நடிகர் ஆமிர் கானுடன் "தங்கல்' என்ற ஹிந்திப் படத்தில் நடித்த சாய்ரா வசீம் சனிக்கிழமை இரவு, தில்லியில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற விஸ்டாரா தனியார் நிறுவன விமானத்தில் பயணம் செய்தார். அப்போது தனது இருக்கைக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பயணி தன்னைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக அவர் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக சாய்ரா வசீம் கூறியதாவது:
அந்த விமானத்தில் எனக்குப் பின்னால் நடுத்தர வயதுடைய ஒரு நபர் அமர்ந்திருந்தார். அவரால் எனது இரண்டு மணிநேர பயணம் துன்பகரமாக மாறியது. அவர் பின்னால் இருந்து தனது காலை நீட்டி எனது இருக்கையில் கை வைத்துக் கொள்ளும் பகுதி மீது தனது பாதத்தை வைத்தார். மேலும் தொடர்ந்து தனது காலால் எனது தோளை உரசினார். தவிர என் முதுகு மற்றும் கழுத்துப் பகுதியிலும் கால்களை மேலும் கீழும் நகர்த்திக் கொண்டிருந்தார். இது எனக்கு பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்தியது.
இவை அனைத்தையும் எனது செல்லிடப்பேசியில் உள்ள கேமரா மூலம் படமெடுக்கத் திட்டமிட்டேன். ஆனால், அப்போது விமானத்தின் உள்ளே விளக்கொளி மங்கியிருந்ததால் படமெடுக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் நடந்திருக்கக் கூடாது. நான் மிகவும் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டேன் என்று சாய்ரா வசீம் தெரிவித்தார்.
விமானத்தை விட்டு இறங்கியதும் அவர் விடியோ பதிவொன்றை எடுத்து வெளியிட்டார். அதில் அவர் பலமுறை அழும் காட்சி இடம்பெற்றுள்ளது. 
இந்தச் சம்பவம் தொடர்பாக சாய்ரா அளித்த புகாரின் பேரில் மும்பை போலீஸார், அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் விகாஷ் சச்தேவ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக காவல் துறை துணை ஆணையர் அனில் கும்பாரே தெரிவித்தார்.
பாலியல் தொந்தரவு சம்பவத்துக்காக விஸ்டாரா விமான நிறுவனம் சாய்ரா வசீமிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், இத்தகைய சம்பவங்களை சகித்துக் கொள்ள முடியாது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சாய்ரா வசீம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அவமானகரமானது என்று மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத் தலைவரான விஜயா ரஹாட்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு உத்தரவிடப் போவதாகவும், இப்புகாரின் பேரில் விஸ்டாரா விமான நிறுவனம் எடுத்த நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மெஹபூபா கண்டனம்: சாய்ரா வசீம் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதால் அவரது மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளர். இந்தச் சம்பவத்தால் தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்தார். அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் சம்பந்தப்பட்ட பயணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கை சமர்ப்பிப்பு: இந்த விவகாரம் தொடர்பாக விஸ்டாரா விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
விமானத்தில் சாய்ராவுக்கு ஏற்பட்ட துரதிருஷ்டவசமான அனுபவத்தால் நாங்கள் மிகவும் வருத்தமும், கவலையும் அடைந்துள்ளோம். இந்த விவகாரத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவதோடு, இது தொடர்பான விசாரணைக்கு முழு ஆதரவையும் அளிப்போம். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு எங்கள் தரப்பில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சாய்ராவைச் சந்திக்கவும், விசாரணைக்கு உதவவும் எங்கள் நிறுவன உயர் அதிகாரிகள் மும்பை சென்றுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com