தேர்தல் பிரசாரத்தில் தன்னைப் பற்றியே அதிகம் பேசுகிறார் மோடி: ராகுல்

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரங்களில், வளர்ச்சி பற்றி பேசுவதை விட்டுவிட்டு பிரதமர் மோடி, தன்னைப் பற்றியே அதிகம் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
தேர்தல் பிரசாரத்தில் தன்னைப் பற்றியே அதிகம் பேசுகிறார் மோடி: ராகுல்

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரங்களில், வளர்ச்சி பற்றி பேசுவதை விட்டுவிட்டு பிரதமர் மோடி, தன்னைப் பற்றியே அதிகம் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
குஜராத் மாநிலத்தில் 2-ஆவது கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரத்தை ராகுல் காந்தி, சனிக்கிழமை தொடங்கினார். இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை, டாகோர் நகரில் உள்ள ரண்சோட்ஜி கிருஷ்ணர் கோயிலில் வழிபாடு செய்த பிறகு பிரசாரத்தைத் தொடங்கினார். அங்கு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
முதலில், குஜராத்தில் நர்மதை அணைத் திட்டத்தை செயல்படுத்தியதைப் பற்றி பாஜக பிரசாரம் செய்தது. ஆனால், 4-5 நாள்களுக்குப் பிறகு, நர்மதை நதி நீர் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அதன் பிறகு, அதை விட்டுவிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் (ஓபிசி) நலன்கள் குறித்து பாஜக பிரசாரம் செய்தது. அடுத்த சில தினங்களில், ஓபிசி சமூகத்தினருக்கு பாஜக எதுவும் செய்யவில்லை என்று அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர். அதையடுத்து, ஓபிசி சமூகத்தினர் பற்றி பேசுவதை விட்டுவிட்டு, வளர்ச்சி யாத்திரை நடத்தப்போவதாக, பாஜக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசினார். அவரது உரையில், 90 சதவீதம், அவரைப் பற்றியே பேசினார். இந்தத் தேர்தல் எனக்காகவோ, அல்லது மோடிக்காகவோ நடத்தப்படவில்லை. மேலும், பாஜகவுக்காகவோ, காங்கிரஸ் கட்சிக்காகவோ நடத்தப்படவில்லை. குஜராத் மக்களின் எதிர்காலத்துக்காக நடத்தப்படுகிறது.
தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டம் குறித்து மோடி பேசவில்லை. படேல் சமூகத்தினர், தலித் சமூகத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்தும் அவர் பேசவில்லை. பண மதிப்புநீக்க நடவடிக்கை, சரக்கு-சேவை வரி அமலாக்கம் குறித்தும் மோடி பேசவில்லை. 
மேலும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் நிதி முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
பிரதமரின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, கள்வர்கள் தங்களது கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு உதவியாக இருந்தது. அதைத் தொடர்ந்து அமல்படுத்திய சரக்கு-சேவை வரி, சிறு தொழில் வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது; ஒரு லட்சம் பேர் வேலையிழப்பதற்கு வழி வகுத்தது. நாளொன்றுக்கு ரூ.100 சம்பாதித்த தேநீர்க் கடைக்காரர், தற்போது ரூ.50 மட்டுமே சம்பாதிக்கிறார். அவருக்கு 50 சதவீத இழப்பு ஏற்படுகிறது.
எனவே, பிரதமர் மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் காங்கிரஸ் தொண்டர்கள் தவறான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம். இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசியே, குஜராத் பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்துவிடலாம் என்றார் ராகுல் காந்தி.
மோடி பதில் சொல்வாரா?: இதனிடையே, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பிரதர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்குமா? என்று ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் தேர்தலையொட்டி, அந்த மாநிலத்தில் 22 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜகவுக்கு தினம் ஒரு கேள்வி வீதம், அவர் எழுப்பி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com