ரயில்கள் ஒரு மணிநேரத்துக்கும் மேல் தாமதமானால் பயணிகளுக்கு குறுஞ்செய்தி: ரயில்வே அறிமுகம்

ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகும்பட்சத்தில், அதுகுறித்து பயணிகளுக்கு ரயில்வே தரப்பில் குறுஞ்செய்தி அனுப்பும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்கள் ஒரு மணிநேரத்துக்கும் மேல் தாமதமானால் பயணிகளுக்கு குறுஞ்செய்தி: ரயில்வே அறிமுகம்

ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகும்பட்சத்தில், அதுகுறித்து பயணிகளுக்கு ரயில்வே தரப்பில் குறுஞ்செய்தி அனுப்பும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்தச் சேவையின்மூலம், இதுவரையிலும் 33 லட்சம் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து தில்லியில் ரயில்வே நிர்வாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகும் பட்சத்தில் அதுகுறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தும் நோக்கில், குறுஞ்செய்தி அனுப்பும் புதிய சேவை ரயில்வேயால் தொடங்கப்பட்டுள்ளது. 102 பிரீமியம் ரயில்களில் இந்த சேவை கடந்த நவம்பர் மாதம் 3-ஆம் தேதி முதல் கடந்த 7-ஆம் தேதி வரையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராஜ்தானி, சதாப்தி, தேஜஸ், கதிமான் ஆகிய ரயில்களில் இந்தச் சேவை அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ரயில்களில் பயணம் செய்த பயணிகளுக்கு, ரயில்கள் தாமதம் ஆனது குறித்து 33,08,632 குறுஞ்செய்திகள் ரயில்வேயால் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தச் சேவை வெற்றியடைந்ததையடுத்து, அடுத்த ஆண்டுக்குள், துரந்தோ, சுவிதா போன்ற மேலும் 148 பிரீமியம் ரயில்களுக்கு இச்சேவையை விரிவுபடுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்தச் சேவையை பெற விரும்பும் பயணிகள், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, அதற்கான விண்ணப்பத்தில் தங்களது செல்லிடப்பேசி எண்ணைக் குறிப்பிட வேண்டும். அந்த செல்லிடப்பேசி எண்ணுக்கு ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகும்பட்சத்தில், குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இந்தச் சேவைக்கு கட்டணம் எதுவும் கிடையாது. இலவசமாக அனுப்பப்படுகிறது. இதற்கு ஆகும் செலவை ரயில்வே ஏற்றுள்ளது.
தற்போதைய நிலையில், இந்தச் சேவை பிரீமியம் ரயில் பயணிகளுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. பிற ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அளிக்கப்படவில்லை. ஆனால் அதேநேரத்தில், டிக்கெட் முன்பதிவு ரத்து, ரயில் நேரம் மாற்றியமைப்பு போன்றவை குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோல், ரயில்கள் 3 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகும்பட்சத்தில், அந்தப் பயணிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது என்று ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com