இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக உயரும்: சர்வதேச வங்கி 'நோமுரா' கணிப்பு

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) அடுத்த ஆண்டில் 7.5 சதவீதமாக உயரும் என்று சர்வதேச முதலீட்டு வங்கியான 'நோமுரா' கணித்துள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) அடுத்த ஆண்டில் 7.5 சதவீதமாக உயரும் என்று சர்வதேச முதலீட்டு வங்கியான 'நோமுரா' கணித்துள்ளது.
அதேவேளையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, மாநில தேர்தல் முடிவுகள் உள்ளிட்டவை பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.
ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'நோமுரா' குழுமமானது நிதி சார்ந்த சேவைகளையும், வங்கிச் சேவைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பல்வேறு நாடுகளில் அக்குழுமத்தின் நிறுவனங்கள், வங்கிகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், 2018-ஆம் ஆண்டில் ஆசியப் பொருளாதாரம் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் ஜிடிபி குறித்தும், நிதிச் சூழல் குறித்தும் 'நோமுரா' சில தகவல்களை அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
இந்திய அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பணமதிப்பிழப்பு, சரக்கு - சேவை வரி உள்ளிட்டவை அவற்றில் முதன்மையானவை. பழைய ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய நோட்டுகளை புழக்கத்துக்குக் கொண்டு வந்திருப்பது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கை. ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதும் அதற்கு வலுசேர்க்கும் மற்றொரு நடவடிக்கை.
இத்தகைய சீர்திருத்தங்களால் உடனடியாக பலன் கிடைக்காமல் இருந்தாலும், படிப்படியாக பொருளாதார வளர்ச்சிக்கு அது வித்திடும் என்பது உறுதி. 
நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக இருந்தது. அதற்கு அடுத்த காலாண்டில் அது 6.2 சதவீதமாக உயர்ந்தது. அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அந்த விகிதம் 6.7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே அடுத்த ஆண்டை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதத்தை எட்டக்கூடும். அதற்கான நிதிச் சூழல்களும், வாய்ப்புகளும் இந்தியாவில் உருவாகியுள்ளன என்று அந்த அறிக்கையில் 'நோமுரா' குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com