காங்கிரஸ் தலைவரானார் ராகுல்: போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி (47) போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவரானார் ராகுல்: போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி (47) போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அக்கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தில்லியில் திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்தார்.
வரும் 16-ஆம் தேதி ராகுல் முறைப்படி தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழும் அவருக்கு அளிக்கப்பட இருக்கிறது.
கடந்த 2013 ஜனவரியில் காங்கிரஸ் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி, தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கடந்த ஓராண்டுக்கு மேலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் கட்சியின் ஒட்டுமொத்த ஆதரவுடன் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தாயாரைத் தொடர்ந்து...: ராகுலுக்கு முன்பு அவரது தாயார் சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவராக இருந்தார். இப்போது 71 வயதாகும் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால், பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதையும் அவர் தவிர்த்து வந்தார்.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 1-ஆம் தேதி வெளியானது. இதையடுத்து ராகுல் தனது விருப்ப மனுவை கடந்த 4-ஆம் தேதி தாக்கல் செய்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் தலைவராக வேண்டுமென்று மனு தாக்கல் செய்தனர். இவ்வாறு மொத்தம் 89 மனுக்கள் அவருக்காக தாக்கல் செய்யப்பட்டன. அவரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விதிகளின்படி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக முல்லப்பள்ளி ராமச்சந்திரன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸ் வரலாறு
132 ஆண்டுகள் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சிக்கு, நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகிய 4 பேர் தலைவர்களாக இருந்துள்ளனர். இப்போது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 5-ஆவது நபராக ராகுல் தலைவராகத் தேர்வாகியுள்ளார்.
நேரு 3 ஆண்டுகளும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தலா 8 ஆண்டுகளும், சோனியா காந்தி 19 ஆண்டுகளும் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளனர். சுதந்திரத்துக்கு முன்பு நேருவின் தந்தை மோதிலால் நேரு காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவர்தான் இக்குடும்பம் சார்பில் முதல் முறையாக காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் ஆவார்.
மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், சுபாஷ் சந்திரபோஸ், அபுல் கலாம் ஆஸாத், சரோஜினி நாயுடு ஆகியோர் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை வகித்தவர்களில் முக்கியமானவர்கள்.
ஹிந்து மகாசபையை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த மதன் மோகன் மாளவியா, காங்கிரஸ் தலைவராக 4 முறை பதவி வகித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரும் காங்கிரஸ் தலைவராக (1964-67) பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்: காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து தலைநகர் தில்லியில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் பல்வேறு மாநில காங்கிரஸ் தலைமையகங்களில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு சர்வதேச, தேசியத் தலைவர்கள், தொழில் நிறுவனங்கள், அமைப்புகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ராகுல் காந்திக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மோடி வாழ்த்து


ராகுல் காந்திக்கு சுட்டுரை (டுவிட்டர்) மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் இனிமையாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானால், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கும் தங்கள் இலட்சியம் எளிதாக நிறைவேறும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசியிருந்தனர். இந்நிலையில், ராகுலுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் எழுச்சி பெறும்


ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி புதிய எழுச்சியடையும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார். ராகுலுக்கு சுட்டுரை மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது:
ராகுல் தலைவரானது மூலம் காங்கிரஸ் கட்சிக்கு இளரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. அவரது தலைமையில் கட்சி துடிப்புடன் செயல்படும். கட்சி புதிய எழுச்சி பெற்று நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நமது நாட்டில் மதசார்பின்மையையும், ஜனநாயகத்தையும் காக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com