மன்னிப்பு கேட்க வேண்டும் மோடி

முன்னாள் குடியரசு துணைத் தலைவர், முன்னாள் பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில், பாகிஸ்தானுடன் இணைந்து குஜராத் தேர்தல் குறித்து சதித் திட்டம் தீட்டப்பட்டதாக பிரதமர்
மன்னிப்பு கேட்க வேண்டும் மோடி

முன்னாள் குடியரசு துணைத் தலைவர், முன்னாள் பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில், பாகிஸ்தானுடன் இணைந்து குஜராத் தேர்தல் குறித்து சதித் திட்டம் தீட்டப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் முதற்கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்து, இரண்டாவது கட்டப் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த மாநிலத்தின் பாலன்பூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தத் தேர்தலில் தலையிட்டு தங்களுக்கு ஆதரவானவர்களை வெற்றி பெற வைக்க பாகிஸ்தான் சதித் திட்டம் தீட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் குஜராத் முதல்வராக வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ முன்னாள் அதிகாரி விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், காங்கிரஸ் கட்சி எம்.பி. மணிசங்கர் அய்யர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சொஹைல் முகமதுவுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகவும் மோடி குறிப்பிட்டார்.
அந்தக் கூட்டத்துக்குப் பிறகுதான் மணிசங்கர் அய்யர் தம்மை 'இழிவானவர்' என்று விமர்சித்ததாகக் கூறிய அவர், இந்தச் சம்பவங்கள் குறித்து சந்தேகத்தை எழுப்பினார்.
இந்நிலையில், மோடியின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மாண்பு மிக்க பிரதமர் பதவியை வகிக்கும் நரேந்திர மோடியே தற்போது அரசியல் சுயலாபத்துக்காக பொய் தகவல்களையும், புனையப்பட்ட கதைகளையும் பரப்பி வருவதைக் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தேர்தலில் நிச்சயம் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில், கிடைத்த சிறு வாய்ப்புகளையும் பயன்படுத்தி அவர் அவதூறுகளை வாரியிறைப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
முன்னாள் பிரதமர், ராணுவ முன்னாள் தளபதி உள்ளிட்ட இந்திய அரசியல் சாசனத்தின் மாண்பு மிக்க உயர் பதவிகளை வகித்தவர்கள் மீது கூட சேற்றை வாரியிறைப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி மிகத் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு தேசப்பற்று குறித்து யாரும் பாடம் நடத்தத் தேவையில்லை. அதிலும், பயங்கரவாதத்துக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடி வரும் அந்தக் கட்சிக்கு, உதம்பூர் மற்றும் குர்தாஸ்பூர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகும் அழையா விருந்தாளியாக பாகிஸ்தான் சென்ற பிரதமரின் அறிவுரைகள் தேவையே இல்லை.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் ஆதரவுடன் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பதான்கோட் விமானப் படை தளத்தில் ஆய்வு நடத்த, பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவரையே அழைத்ததற்கான காரணத்தை முதலில் பிரதமர் விளக்க வேண்டும்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக நான் நாட்டுக்கு ஆற்றி வரும் சேவை குறித்து எல்லோருக்கும் தெரியும். அரசியல் பிழைப்புக்காக அதுகுறித்து மோடி உள்பட யாரும் கேள்வி கேட்க முடியாது.
மணிசங்கர் அய்யர் இல்லத்தில் பாகிஸ்தானுடன் இணைந்து குஜராத் தேர்தல் குறித்து விவாதித்ததாக மோடி என் மீது கூறிய குற்றச்சாட்டை நான் வன்மையாக மறுக்கிறேன். முக்கியத்துவம் வாய்ந்த முன்னாள் அரசு அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நட்புறவு குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.
எனவே, பிரதமர் நரேந்திர மோடி மலிவான அரசியல் ஆதாயங்களைத் தேடுவதைக் கைவிட்டு முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். கூட்டுச் சதி குறித்த தனது கருத்துக்கு இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்டு, தனது பதவியின் மாண்பை அவர் காப்பாற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
ப. சிதம்பரம் சாடல்: இதற்கிடையே, குஜராத்தில் பாஜக-வின் தேர்தல் பிரசாரம் விசித்திரமாகிவிட்டதாக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சாடியுள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில், குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாஜகவின் பிரசாரம் விசித்திர நிலையை அடைந்துவிட்டது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒரு அரசியல் கட்சி இவ்வளவு தரம் தாழ முடியுமா?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com