இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2%-ஆக உயரும்: ஐ.நா. கணிப்பு

அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஐ.நா.அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஐ.நா.அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு காரணமாக நாட்டின் நிதிச் சூழல் தற்போது சுணக்கமடைந்திருந்தாலும், அடுத்து வரும் ஆண்டுகளில் அந்த நிலை மாறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டுக்கான சர்வதேச பொருளாதாரச் சூழல் மதிப்பீடு தொடர்பான ஐ.நா. அறிக்கை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு நாடுகளின் நிதி நிலைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
இந்தியாவைப் பொருத்தவரை, அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் பலன் விரைவில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது. இதன் காரணமாக நாட்டில் கடினமான பொருளாதாரச் சூழல் நிலவ வாய்ப்பில்லை. அதேபோன்று, இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையும் கணிசமாகக் குறைந்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அடுத்த ஆண்டில் அது மேலும் குறையக்கூடும்.
இதைத் தவிர இந்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகட்டும்; தனியார் மற்றும் அரசுத் துறை முதலீடுகளாகட்டும், நாட்டின் நிதிச் சூழலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பது உறுதி. 
இதன் விளைவாக 2018-இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாகவும், அதற்கு அடுத்த ஆண்டில் அது 7.4 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார மேம்பாட்டில் தனியார் நிறுவன முதலீடுகள்தான் முக்கியக் காரணியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நேர்மறையான அம்சங்கள் இருந்தாலும், நாட்டின் நிதிக் கொள்கைகளில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவி வருவதை உணர முடிகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com