நிர்பயா சம்பவம் நடந்து 5 ஆண்டுகளில் தில்லி கொஞ்சமாவது மாறியுள்ளதா?

நிர்பயா சம்பவம் நடந்து 5 ஆண்டுகளில் தில்லி கொஞ்சமாவது மாறியுள்ளதா?

ஓடும் பேருந்தில் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட 23 வயது மாணவி நிர்பயா சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.


புது தில்லி: ஓடும் பேருந்தில் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட 23 வயது மாணவி நிர்பயா சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.

டிசம்பர் 16ம் தேதி, இந்தியத் தலைநகர் தில்லி 'பலாத்காரத் தலைநகர்' என்ற அந்தஸ்தைப் பெற்ற நாள்.

நிர்பயா சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு கடந்த 5 ஆண்டுகளில் தில்லியில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாறிவிட்டதா என்று கேட்டால் அதற்கு பதில் "இல்லை" என்பதே.

தேசிய குற்றப் பதிவியல் ஆவணக் காப்பகம் அளித்த புள்ளி விவரத்தில், 2016 - 17ம் ஆண்டில் தில்லியில் தான் அதிக அளவில் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தேசிய அளவில் குற்றச் சராசரி 55.2 சதவீதம் என்ற அளவில் இருக்கும் போது, தில்லியில் 160.4 சதவீத குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 40 சதவீதம் அதாவது 2,155 பலாத்காரக் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இது பற்றி பல துறைகளைச் சேர்ந்த பெண்களிடம் கேட்கப்பட்டபோது, சுமித்ரா என்பவர் கூறியதாவது, நகரப் பகுதிகளில் கூட பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர முடியவில்லை. சாலையில் நடந்து செல்லும் போது வார்த்தைகளால் அநாகரீகமாக பேசுவதும், பலாத்காரம் செய்து விடுவதாக மிரட்டுவதும் சாதாரணமாக நடக்கிறது என்கிறார்.

ஆடை வடிவமைப்புத் தொழில் செய்து வரும் மற்றொரு பெண் கூறுகையில், இரவு 9 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியேறுவது ஆபத்தானதாக இன்றும் உள்ளது. அதிலும் ஆட்டோ, டேக்ஸியில் இரவு நேரங்களில் பயணிப்பது என்பது அச்சமூட்டுவதாக மாறிவிட்டது. நான் எப்போதும் கைவசம் மிளகு ஸ்ப்ரேவை வைத்திருப்பேன் என்கிறார்.

இரவு நேரங்களில் ரயில்களில் பொதுப் பெட்டிகளில் பயணிப்பது கூட  கெட்டக் கனவாக முடிந்து விடுகிறது. இதுபோன்ற சமயங்களில் பெண்களின் ஆடைகளை குற்றம் சொல்கிறார்கள். ஆனால், நாகரீகமான ஆடை அணிந்திருக்கும் பெண்களும் பல சமயங்களில் குற்றவாளிகளுக்கு இலக்காகிறார்களே? என்கிறார் சுகன்யா கோஷ்.

திஷா தத்தா குப்தா பேசுகையில், நிர்பயா சம்பவம் நடந்த போது உண்மையிலேயே நிலைமை மாறிவிடும் என்று நம்பினேன். அந்த சமயத்தில் கொஞ்சம் மாறியது. ஆனால், இப்போதும் பலாத்காரம் தொடர்பான குற்றங்களை கொடுக்கும் போது காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதுதான் நீடிக்கிறது. இரவு நேரங்களில் தனியாக வீட்டுக்கு வரும் போது அருகில் யாராவது வந்தாலோ, கார் வந்தால் கூட நான் நடுங்கிப் போய்விடுவேன் என்கிறார்.

சொல்லிக் கொள்ளும் அளவுக்கு குற்றங்களும் குறையவில்லை, கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பெண்களும் பாதுகாப்பாக உணரவில்லை. நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு தில்லி மாநகரமே போராட்டங்களாலும், ஆர்ப்பாட்டங்களாலும் குலுங்கியது எல்லாம் வெறும் செய்திகளாகவே போயினவா?
 

ஒவ்வொரு நாளும் அங்கே பலாத்காரம், இங்கே பெண்ணுக்குக் கொடுமை என்ற செய்திகள் நாளிதழ்களில் இடம்பெறத் தவறியதே இல்லை.

ஒரு சம்பவம் நடந்த உடனேயே பரபரப்புத் தீர்ப்பு வழங்கப்படுவதும், அதைப் பார்த்து மக்கள் நிம்மதி அடைவதும், பிறகு அதே குற்றவாளிகள் மேல்முறையீடுகளை செய்து தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதும், அதைப் பற்றி கவலைப்பட நேரமில்லாத பொதுமக்கள் வேறு ஒரு பரபரப்பான பிரச்னையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதும் வாடிக்கைதான்.

அதனால் தான் அரசுகளும், காவல்துறையும் ஒரு சம்பவம் நடந்தும் அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுப்பது போன்று ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, அடுத்த பிரச்னையில் மக்களின் கவனம் திரும்பியதும், பழைய நிலைக்கு விட்டுவிடுவதும்.

நாட்டில் பெண்களின் பாதுகாப்பு நிலை இப்படி இருக்க, பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு ஏற்படுத்திய நிர்பயா நிதிக்கு ஒதுக்கப்பட்ட பணமே கடந்த 5 ஆண்டுகளாக செலவிடப்படாமல் இருந்ததுதான் வெட்கக்கேடான விஷயம். இறுதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட பிறகு, அந்த ரயில் நிலையத்தில் மட்டும், நிர்பயா நிதியில் இருந்து சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டிருக்கிறது. இதில் இருந்தே பெண்களின் பாதுகாப்புக்கு மாநில அரசுகளும், மத்திய அரசும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன என்பதை மக்கள் தாராளமாகப் புரிந்து கொள்ளலாம்.

எத்தனை நிர்பயாக்கள் வந்தாலும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் செய்ய முடியாத அளவுக்கு மாநில, மத்திய நிர்வாகங்கள் துருப்பிடித்துப் போய்விட்டனவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com