ஆதார் விவகாரம்: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை

ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி தொடுக்கப்பட்டிருக்கும் மனுக்கள் மீது 5 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை (டிச.14) விசாரணை

ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி தொடுக்கப்பட்டிருக்கும் மனுக்கள் மீது 5 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை (டிச.14) விசாரணை நடத்தவுள்ளது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு புதன்கிழமை கூறுகையில், "ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரும் மனுக்கள் மீது 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்கும்' என்றனர்.
நிரந்தர கணக்கு எண், செல்லிடப் பேசி சேவை, வங்கி கணக்கு, அரசு மானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு நாட்டு மக்கள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், வங்கிக் கணக்கு, செல்லிடப் பேசி எண் ஆகியவற்றுடன் ஆதாரை இணைக்கக் கோருவது சட்ட விரோதம், சட்டத்துக்கு எதிரானது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு மனுதாரரின் வழக்குரைஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வாதாடுகையில், ஆதார் தொடர்பான முக்கிய மனு மீது அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரையிலும், ஆதாரை வங்கி கணக்குடனோ அல்லது செல்லிடப் பேசியுடனோ இணைக்கக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினார்.
இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி விசாரணை நடைபெற்றபோது, பல்வேறு நலத் திட்டங்கள், சேவைகளுக்கு ஆதாரை இணைக்க விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையிலும் நீட்டிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, நலத் திட்டங்கள், பல்வேறு சேவைகளுக்கு ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற முடிவு குறித்து விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அமைப்பது குறித்து ஆலோசிக்கத் தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
முன்னதாக, அந்தரங்கம் தனிநபர் உரிமையா? இல்லையா? என்பது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அதை தனிநபர் உரிமையாக அறிவித்து தீர்ப்பளித்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com