உ.பி.: நில, சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக கடுமையான சட்டம்

நில, சுரங்க மாஃபியாக்களையும், திட்டமிடப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ஒடுக்குவதற்காக, மகாராஷ்டிரத்தில் உள்ள "மோக்கா' சட்டத்தைப் போல, உத்தரப் பிரதேசத்திலும் கடுமையான சட்டத்தை இயற்ற வழிவகை செய்யும் வரைவு

நில, சுரங்க மாஃபியாக்களையும், திட்டமிடப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ஒடுக்குவதற்காக, மகாராஷ்டிரத்தில் உள்ள "மோக்கா' சட்டத்தைப் போல, உத்தரப் பிரதேசத்திலும் கடுமையான சட்டத்தை இயற்ற வழிவகை செய்யும் வரைவு மசோதாவுக்கு அந்த மாநில அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அந்த மாநில அமைச்சரவையின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின்னர், மாநில அரசின் செய்தித் தொடர்பாளரும், மின்துறை அமைச்சருமான ஸ்ரீகாந்த் சர்மா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் நில, சுரங்க மாஃபியாக்களையும், திட்டமிடப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ஒடுக்குவதற்காக, "உத்தரப் பிரதேச திட்டமிடப்பட்ட குற்ற நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை' கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வரைவு மசோதாவுக்கு, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதா, வியாழக்கிழமை (டிச.14) தொடங்கவிருக்கும் சட்டப் பேரவை குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும்.
ஆள்கடத்தல், சட்டவிரோதமாக மது தயாரித்தல் - விற்பனை செய்தல், ஆள்பலத்தின் மூலம் ஒப்பந்தங்களை கைப்பற்றுதல், வன வளங்களை அழித்தல், போலி மருந்துகள் தயாரித்தல், அரசு, தனியார் சொத்துக்களை அபகரித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலான 28 சட்டப் பிரிவுகள், மேற்கண்ட வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ளன. மேலும், இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான அம்சங்களும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
மேற்கண்ட குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கவும், திட்டமிடப்பட்ட குற்ற நடவடிக்கைளை கட்டுப்படுத்த மாநில அளவிலான ஆணையத்தை அமைக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார் ஸ்ரீகாந்த் சர்மா.
மகாராஷ்டிர மாநிலத்தில் திட்டமிடப்பட்ட குற்றங்களையும், பயங்கரவாதத்தையும் ஒடுக்குவதற்காக "மகாராஷ்டிர மாநில திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டம்' (மோக்கா) அமலில் உள்ளது. இச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின் பேரில் எவரையும் கைது செய்யலாம் என்பதுடன், 6 மாதங்களுக்கு அவர்கள் ஜாமீன் பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com