ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் இந்தியாவின் முதல் மீனவச்சி! தடைகளைத் தகர்த்து தடம் பதித்த பெண்!!

அனைத்துத் துறைகளிலும் இன்று பெண்கள் கால் பதித்து வரும் நிலையில் கேரளாவை சேர்ந்த 45-வயதான இந்தப் பெண் ஆழ் கடலில் மீன் பிடிக்கும் முதல் இந்திய பெண் மீனவச்சி என்னும் அடையாளத்தைப் பெற்றுள்ளார்.
ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் இந்தியாவின் முதல் மீனவச்சி! தடைகளைத் தகர்த்து தடம் பதித்த பெண்!!

அனைத்துத் துறைகளிலும் இன்று பெண்கள் கால் பதித்து வரும் நிலையில் கேரளாவை சேர்ந்த 45-வயதான இந்தப் பெண் ஆழ் கடலில் மீன் பிடிக்கும் முதல் இந்திய பெண் மீனவச்சி என்னும் அடையாளத்தைப் பெற்றுள்ளார்.

கடலோர மாநிலமான கேரளாவில் வாழும் பெரும்பாலான மக்கள் மீன் பிடிக்கும் தொழிலில் தங்களை ஈடுபடுத்தியுள்ளனர். அதே சமயம் இது அதிக உடல் உழைப்பு தேவை படுகின்ற ஒரு வேலை என்பதும் குறிப்பிடத்தக்கது. அலைகளுடன் போராடி படகைச் செலுத்துவது, நடுக்கடலில் வலையை வீசி நீண்ட நேரம் காத்திருந்து முழு பலத்தையும் பயன்படுத்தி அந்த வலையை வலித்து மீன் பிடிக்க வேண்டும். அதனால்தான் என்னவோ பொதுவாக ஆண்களே கடலுக்கு சென்று மீன் பிடிக்கிறார்கள், அவர்கள் பிடித்து வரும் மீன்களைக் கரையில் விற்பதை மட்டும் பெண்கள் செய்கிறார்கள்.

இந்த வழக்கத்தை கேரளாவை சேர்ந்த ரேகா உடைத்து எரிந்துள்ளார். அலைகள் நிறைந்த அரேபிய கடலில் படகைச் செலுத்தி மீன் பிடித்து வருகிறார் இந்தப் பெண். திரிசூரை சேர்ந்த இவர் தனது கணவன் கார்த்திகேயனுடன் இணைந்து இந்த மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளார். வழி காட்டும் கருவி, ஜி.பி.எஸ், உயிர் காக்கும் உடை போன்ற எந்தவொரு நவீன சாதனத்தின் உதவியும் இல்லாமல் கடலை தங்களது தாயாக நினைத்து தினமும் பல போராட்டங்களுக்கு மத்தியில் மீன் பிடித்து தங்களது வாழ்வை நகர்த்தி வருகிறார்கள் இந்தத் தம்பதியினர். 

4 குழந்தைகளுக்குத் தாயான 45-வயது பெண் ஒருவர் நாட்டில் உள்ள பல பெண்கள் முயற்சி கூட செய்து பார்க்காத ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து அதில் வெற்றிகரமாகத் தனனை நிரூபித்துக் காட்டி வரும் இதுவே உண்மையான பெண்ணியம். தனது சமூகத்தில் இருக்கும் பல பெண்களும் தன்னுடைய இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் தனது கணவரின் ஆதரவுடன் விடாமல் முயற்சித்து இதில் வெற்றி பெற்றிருப்பதாக ரேகா கூறியுள்ளார். 

இவர்கள் இருவரும் தங்களது பெற்றோர்களின் எதிர்ப்பை மீறிக் காதல் திருமணம் செய்து கொண்டதால், இரு வீட்டாரது ஆதரவும் இல்லாமல் இந்தச் சமூகத்தில் வாழ வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். “வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் எங்களை இரு கரம் நீட்டி வரவேற்று எங்களை ஏற்றுக் கொண்டது இந்தக் கடல் மாதா” என்று பூரிப்புடன் ரேகா தெரிவிக்கிறார்.

கணவன் கார்த்திகேயனிடம் மீன் பிடிக்கும் முறையை அடிப்படை முதல் முழுவதுமாக கற்று தேரியுள்ளார் இவர். “ரேகாவால் மீன் இருக்கும் இடத்தை முகர்ந்தே கண்டுபிடிப்பது, நீரோட்டத்திற்கு எதிர்த் திசையில் நீந்துவது, மிக வேகமாக மீன் வலையைக் கடலில் வீசுவது என ஒரு மீனவன் செய்யக் கூடிய அனைத்தையும் துல்லியமாக செய்ய முடியும். எந்த இடத்தில் எந்த மீன் இருக்கும், அவற்றின் வழித் தடங்கள் என்ன என இந்தக் கடலையே கரைத்துக் குடித்திருக்கிறாள் அவள்” என்று தன் மனைவியைப் பற்றி பெருமையுடன் கூறுகிறார் கார்த்திகேயன். 

கடலோர நீரோட்டத்தில் பல பெண்கள் மீன் பிடித்தாலும் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் ஒரே இந்திய பெண் இவர் தான் என்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனமே (CMFRI) தெரிவித்து இவர் அரசின் மீனவ உரிமத்தையும் வழங்க உதவியுள்ளது. இவர்களைப் பாராட்டி இந்த நிறுவனம் இவர்களுக்கு உதவும் வகையில் ஊக்கத் தொகை வழங்கியதோடு மட்டுமில்லாமல் 12-ம் வகுப்பு படிக்கும் இவர்களது மூத்த மகள் மாயாவிற்கு ரூ.1 லட்சம் உதவித் தொகையும் தந்துள்ளது. 

வானம் ஒன்றே எல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கடலின் ஆழத்தைக் கண்டு அஞ்சாமல் பல பெண்களுக்கு முன்னோடியாக விளங்கும் இந்த ரேகா ஒரு சரித்திர பெண் என்பதில் சந்தேகம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com