காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பு: விழாக்கோலம் பூண்டது தலைமை அலுவலகம்

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பு: விழாக்கோலம் பூண்டது தலைமை அலுவலகம்

காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியின் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியின் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று, 19 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் பொறுப்பேற்பு விழா இன்று நடைபெற்றது.
 
இவ்விழாவில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும்  பங்கேற்றனர். ராகுல் காந்தி பொறுப்பேற்பு விழாவை முன்னிட்டு தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் விழாக் கோலம் பூண்டிருந்தது.

கட்சித் தலைவர் தேர்தலில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட ராகுல், இன்று காலை 11 மணியளவில் முறைப்படி தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராகவும், நேரு குடும்பத்தில் 6வது தலைவராகவும் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சோனியா மகன் ராகுல் (47) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை அக்கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து தில்லியில் உள்ள 132 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்டார். அப்போது தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் அவருக்கு அளிக்கப்பட்டது.

கடந்த 2013 ஜனவரியில் காங்கிரஸ் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல், தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கடந்த ஓராண்டுக்கு மேலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் கட்சியின் ஒட்டுமொத்த ஆதரவுடன் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டு இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com