நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை

நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 
நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை

நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடைபெற்ற ஊழலில், அரசுக்கு சுமார் ரூ.1.80 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 

இதுகுறித்து சிபிஐ நடத்திய விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ராஜ்கரா நிலக்கரிச் சுரங்கம், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வினி அயர்ன் மற்றும் ஸ்டீல் உத்யோக் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டதிலும் ஊழல் நடந்திருப்பதை கண்டுபிடித்தது.

இந்த விவகாரம் குறித்து, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமைச் செயலர் ஏ.கே. பாசு, அரசு அதிகாரிகள் வசந்த் குமார் பட்டாச்சார்யா, விபின் பிகாரி சிங், வினி அயர்ன் மற்றும் ஸ்டீல் உத்யோக் நிறுவனம், அந்நிறுவனத்தின் இயக்குநர் வைபவ் துல்ஷ்யன், கோடாவின் நெருங்கிய உதவியாளர் விஜய் ஜோஷி, கணக்கு தணிக்கையாளர் நவீன் குமார் துல்ஷ்யன் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. 

அதில், வினி அயர்ன் மற்றும் ஸ்டீல் உத்யோக் நிறுவனமானது அரசிடம் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விண்ணப்பித்திருந்தது; ஜார்க்கண்ட் அரசோ, மத்திய உருக்கு அமைச்சகமோ எந்தவித சிபாரிசும் அளிக்காத நிலையில், அந்நிறுவனத்துக்கு சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்படும்படி, ஆய்வுக் குழு பரிந்துரைத்ததாக சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது. அப்போது அந்த ஆய்வுக் குழுவின் தலைவராக ஹெச்.சி. குப்தா இருந்ததாகவும், அவர் அப்போதைய பிரதமரும், நிலக்கரித் துறை அமைச்சகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவருமான மன்மோகன் சிங்கிடம் உண்மையை மறைத்து விட்டதாகவும் சிபிஐ தெரிவித்திருந்தது. நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்டதில், வினி அயர்ன் மற்றும் ஸ்டீல் உத்யோக் நிறுவனத்துக்கு சாதகமாக கோடா, பாசு மற்றும் 2 அரசு அதிகாரிகளும் செயல்பட்டதாகவும் சிபிஐ குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அளித்ததோடு ரூ.25 லட்சம் அபாரதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக மதுகோடா உட்பட 4 பேருக்கு 2 மாத இடைக்கால ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com