பாலியல் குற்றச்சாட்டு: ம.பி. நீதிபதி குற்றமற்றவர் என விசாரணைக் குழு அறிக்கை

பாலியல் புகாருக்கு ஆளான மத்தியப் பிரதேச நீதிபதி கங்கலே குற்றமற்றவர் என விசாரணைக் குழு மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்தது.

பாலியல் புகாருக்கு ஆளான மத்தியப் பிரதேச நீதிபதி கங்கலே குற்றமற்றவர் என விசாரணைக் குழு மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்தது. அவர், தனது பதவியையும், அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தினார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியான எஸ்.கே. கங்கலே மீது கீழமை நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை கங்கலே தமக்கு அளிப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக தன்னை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் புகார் அளித்தார்.
இதன் தொடர்ச்சியாக அந்தப் பெண் நீதிபதி, தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்த விவகாரம் அப்போதைய மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரியிடம் கொண்டு செல்லப்பட்டது. நீதிபதி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி, மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், மூத்த வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழுவை ஹமீது அன்சாரி அமைத்தார். அந்த விவகாரம் குறித்து விசாரித்து வந்த அந்தக் குழு, அதுதொடர்பான அறிக்கையை மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் பெண் நீதிபதிக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியது என நீதிபதி கங்கலே மீது மூன்று விதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை விசாரித்ததில் சில முடிவுகளுக்கு வர முடிந்தது. முதலில் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே, அந்தப் புகாரைப் பொருத்தவரை கங்கலே குற்றமற்றவர் என உறுதியாகிறது. அதேபோன்று அவர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான சான்றுகளும் எதுவும் இல்லை.
பெண் நீதிபதி பணியிட மாற்றமானது மாவட்ட நீதிபதியின் பரிந்துரையின்பேரில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த நடவடிக்கையும் அந்தப் பெண் நீதிபதி மீது எடுக்கப்பட்ட சிறு தண்டனையாகவே கருத முடிகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com