சோனியா: சாதனைகளும், சறுக்கல்களும்...

இந்திய அரசியல் வரலாற்றில் அழியாத் தடத்தைப் பதித்துச் சென்ற தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
சோனியா: சாதனைகளும், சறுக்கல்களும்...

இந்திய அரசியல் வரலாற்றில் அழியாத் தடத்தைப் பதித்துச் சென்ற தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் ஆட்சி அதிகாரத்தை வழிநடத்திச் சென்று காலச் சுவட்டில் இடம்பிடித்தவர்கள். சிலரோ அரசின் உயர் பதவிகளை வகித்து பெயர் பெற்றவர்கள்.
இதில் எந்த வகையிலும் சேராதவர் சோனியா காந்தி. ஆனாலும், கடந்த 20 ஆண்டுகளாக தேசத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக அவர் எப்படி விளங்கினார்? என்பது பலருக்கும் எழும் கேள்வி. நேருவின் குடும்ப உறுப்பினர் என்ற காரணம் பரவலாக முன்வைக்கப்படுகிறது. 
அது ஒருபுறம் இருந்தாலும், அவரது அரசியல் நகர்வுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்ததால்தான் சோனியாவுக்கு முக்கியத்துவம் கிடைத்தது என்பதை மறுக்க முடியாது.
ராஜீவ் காந்தியின் படு கொலைக்குப் பிறகு காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு கட்சியினர் பணித்தபோது குடும்பச்சூழல் காரணமாக மறுத்தார் சோனியா. 
அதன் பின்னர், கட்சியின் நிலைமை கவலைக்கிடமானபோது வேறுவழியின்றி அப்பொறுப்பை ஏற்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.
நேரடி அரசியல் அனுபவம் ஏதுமில்லாத சோனியாவைக் கண்டு பிற கட்சித் தலைவர்கள் எவரும் அப்போது அஞ்சவில்லை. வெகு சீக்கிரமே காங்கிரஸ் என்ற பெருங்கட்சி கரைந்து கானல் நீராகிவிடும் என்றே நினைத்தனர். ஆனால், அதைத் தவிடுபொடியாக்கி காங்கிரûஸ மத்தியில் மீண்டும் அரியணையேறச் செய்தார் அவர்.
நாட்டின் புதிய பிரதமர் சோனியாதான் என பத்திரிகைகளில் அச்சான செய்தியின் மை காய்வதற்குள்ளேயே, மன்மோகன்தான் பிரதமர் என அறிவித்தார். இது அவரது பெருந்தன்மை என்றும், தியாகம் என்றும் காங்கிரஸார் தெரிவித்தனர். மாற்றுக் கட்சியினரோ வேறு சில காரணங்களைக் கூறினர்.
இரண்டாவது முறை மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியமைத்தபோதும், தனது நிலைப்பாட்டில் சோனியா பின்வாங்கவில்லை. மன்மோகன் சிங்கே பிரதமராகத் தொடர்ந்தார். 
ஆனால் அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி மீண்டும் சரிவை சந்திக்கத் தொடங்கியது. அதை மீட்டெடுக்க வேண்டிய சோனியாவோ, உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்தார். இதன் விளைவாக பல மாநிலங்களில் ஆட்சியைப் பறிகொடுத்தது காங்கிரஸ்.
தற்போது, கட்சியைப் பலப்படுத்தும் நோக்கிலேயே தலைமைப் பொறுப்பை தனது வாரிசுக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளார் சோனியா. அதேவேளையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குத் தொடர்ந்து தலைமை வகிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
பேசியே ஆட்சியைப் பிடித்தவர்களுக்கு நடுவே அமைதியான சுபாவத்துடன் வலம் வந்து கட்சியை வளர்த்தவர் சோனியா. காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை கோஷ்டிகளும், பூசல்களும் புதிதல்ல. 
ஆனால், சோனியாவின் தலைமையின் கீழ் பெரும்பாலான தருணங்களில் காங்கிரஸார் ஒன்றுபட்டே செயல்பட்டிருக்கின்றனர் என்பதே உண்மை. உயரிய வாய்ப்புகளை உதாசீனப்படுத்திய அவருக்கு கட்சியினர் அளித்த பிரதிபலனாகக்கூட அது இருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com