நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் தண்டனை விவரம் சனிக்கிழமை  வெளியிடப்பட்டதையொட்டி, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  நேரில் ஆஜராக வந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் தண்டனை விவரம் சனிக்கிழமை  வெளியிடப்பட்டதையொட்டி, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  நேரில் ஆஜராக வந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா.

நிலக்கரிச் சுரங்க ஊழல்: மது கோடா உள்ளிட்ட 4 பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா, மத்திய நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா உள்ளிட்ட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா, மத்திய நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா உள்ளிட்ட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
இந்த ஊழல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 13ஆம் தேதி தீர்ப்பை வெளியிட்டது. அப்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மது கோடா, ஹெச்.சி. குப்தா, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமைச் செயலர் ஏ.கே. பாசு, மது கோடா உதவியாளர் விஜய் ஜோஷி ஆகிய நால்வரையும், வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவனத்தையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் சனிக்கிழமை வெளியிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதன்படி, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர், தண்டனை விவரங்களை சனிக்கிழமை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
சாதாரண குற்றங்களை விட "வொய்ட் காலர்' குற்றங்கள், இந்த சமூகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாகும். கொள்ளை, திருட்டு போன்ற சாதாரண குற்றங்களில் பெரிய அளவில் இழப்பு ஏற்படாது. ஆயிரக்கணக்கில்தான் இழப்பு ஏற்படும். ஆனால் "வொய்ட் காலர்' குற்றங்களிலோ, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் நிதி இழப்பு ஏற்படும்.
ஆதலால், இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டோருக்கு (மது கோடா உள்ளிட்டோர்) தகுதிக்கான பலனை அளிக்க முடியாது. ஆதலால், மது கோடா, ஹெச்.சி. குப்தா, ஏ.கே. பாசு, விஜய் ஜோஷி ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இதுதவிர, வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம், மது கோடாவுக்கு ரூ.25 லட்சம் , ஜோஷிக்கு ரூ.25 லட்சம், குப்தா மற்றும் பாசுவுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கப்படுகிறது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக மது கோடா உள்ளிட்டோருக்கு 2 மாதகால இடைக்கால ஜாமீன் அளிக்கப்படுகிறது என்று நீதிபதி பரத் பராசர் அறிவித்தார்.
மது கோடாவால் தேர்தலில் போட்டியிட முடியாது: வழக்கில் தண்டிக்கப்படும் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2013}ஆம் ஆண்டு தடை விதித்தது. தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், மது கோடாவால் இனி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து மது கோடா செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், "தீர்ப்பு நகல் கிடைத்ததும், அதுகுறித்து வழக்குரைஞருடன் கலந்தாலோசித்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்; எனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு விட்டது. ஆதலால் அபராதத் தொகை ரூ.25 லட்சத்தை வேறு நபர்களிடம் கடன் வாங்கி செலுத்தவுள்ளேன்' என்றார்.
வழக்கின் பின்னணி: மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடைபெற்ற ஊழலில், அரசுக்கு சுமார் ரூ.1.80 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சிபிஐ பல்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அவற்றில் ஒரு வழக்கில் சிபிஐ நடத்திய விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ராஜ்கரா நிலக்கரிச் சுரங்கம், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வினி அயர்ன் மற்றும் ஸ்டீல் உத்யோக் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்திருப்பதைக் கண்டுபிடித்தது.
இந்த விவகாரம் குறித்து, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, மத்திய நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமைச் செயலர் ஏ.கே. பாசு, அரசு அதிகாரிகள் வசந்த் குமார் பட்டாச்சார்யா, விபின் பிஹாரி சிங், வினி அயர்ன் மற்றும் ஸ்டீல் உத்யோக் நிறுவனம், அந்நிறுவனத்தின் இயக்குநர் வைபவ் துல்ஷியான், கோடாவின் உதவியாளர் விஜய் ஜோஷி, கணக்குத் தணிக்கையாளர் நவீன் குமார் துல்ஷியான் ஆகியோருக்கு எதிராக சிபிஐ கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 5}ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com