பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றங்கள் தேவை

பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என கர்நாடக ஆளுநர் வஜுபாய்வாலா வலியுறுத்தினார்.

பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என கர்நாடக ஆளுநர் வஜுபாய்வாலா வலியுறுத்தினார்.
பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற "தேசிய பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை' என்ற தலைப்பிலான, மத்திய அரசின் 2-ஆவது தென்னிந்திய கலந்தாய்வு மாநாட்டை தொடக்கிவைத்து அவர் பேசியது: மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான அஜ்மல் கசாப் போன்ற பயங்கரவாதிகளை ஆதரிக்கும் ஆள்கள் இருப்பது வேதனை அளிக்கிறது. அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்ட நாளை கசாப் தினம் என்று கடைப்பிடிக்கும் அவலத்தை என்னவென்று சொல்வது?
தேசத் துரோகிகள், பயங்கரவாதிகளை விரைந்து விசாரித்து தண்டிப்பதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். மேலும், பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பான வழக்கை துரிதமாக விசாரிக்க தனிவிரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இதுபோன்ற பயங்கரவாதிகளை மூன்றே நாள்களில் தூக்கிலிட வேண்டும். தேசத் துரோகிகள், பயங்கரவாதிகளுக்கு எந்தக் காரணத்தை முன்னிட்டும் மன்னிப்பு வழங்கக் கூடாது.
இந்தியாவின் ராணுவம் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. அதனால் நமது நாட்டின் பாதுகாப்பு உறுதியாக உள்ளது. இஸ்ரேல் நாடு சிறியதாக இருந்தாலும், பாதுகாப்பில் பலம் வாய்ந்ததாக உள்ளது. நாட்டு பாதுகாப்பில் இஸ்ரேல் நாடு இதர நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் மகளிர் உள்பட நாட்டு குடிமக்கள் அனைவரும் 2 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியிருக்க வேண்டியது கட்டாயமாகும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் சதானந்த கெüடா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.பாட்டீல், மத்திய சட்டத் துறை செயலர் சுரேஷ்சந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com