'வாக்கு வங்கி அதிகரித்துள்ளது'- புள்ளிவிவரங்களை வெளியிட்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷா

இந்த தேர்தலின் மூலம் குடும்ப, சாதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
'வாக்கு வங்கி அதிகரித்துள்ளது'- புள்ளிவிவரங்களை வெளியிட்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷா

குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கான சடடப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து அங்கு திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில், இரு மாநிலங்களிலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறது. குஜராத்தைப் பொறுத்தவரையில் 6-ஆவது முறையாக பாஜக ஆட்சியமைக்கப்போகிறது. மேலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதன்மூலம் நாடு முழுவதிலும், பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்தது. அதேசமயம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4-ஆக சரிந்தது. 

இதுகுறித்து பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தில்லியில் உள்ள தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

மீண்டும் நாங்கள் வெற்றிவாகை சூடியுள்ளோம். இதற்காக குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது சாதி அரசியல், குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இது வளர்ச்சியின் வெற்றி. 

காங்கிரஸின் கீழ்தரமான தேர்தல் யுத்திகளைத் தாண்டி பாஜக சரித்திரம் படைத்துள்ளது. கடந்த தேர்தலைக் காட்டிலும் தற்போது 8 சதவீதம் வாக்கு உயர்ந்துள்ளது. 2012-ல் பாஜக-வுக்கு 47.8 சதவீதம் தான் வாக்கு இருந்தது. ஆனால், தற்போது அது 49.10 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

அதுபோல கடந்த 1990-ம் வருடத்தில் இருந்து குஜராத்தில் பாஜக தோல்வியே கண்டதில்லை. அதன் தொடர்சியாக தற்போது 6-ஆவது முறையாக இங்கு ஆட்சியமைக்கப்போகிறது. 70 ஆண்டுகால இந்திய அரசியல் வரலாற்றில் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா ஒளிர்கிறது. 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாஜக மாற்றிவிட்டதாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அது முழுவதும் மத்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடில் உள்ளது. மத்திய அரசால் அதனை ஒன்றும் செய்துவிட முடியாது.

நாங்கள் 2019 தேர்தலின்போதும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் களமிறங்கவுள்ளோம். இதன்மூலம் 2022-ல் நம்நாடு மற்றும் இளைஞர்களின் வளர்ச்சி குறித்து மோடி கண்ட கனவு நனவாகும். 

இந்த தேர்தல் அனைவரும் குறிப்பிட்டது போன்று கடினமாக கிடையாது. மாறாக பாஜக மிக எளிதான வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் குடும்ப ஆதிக்க அரசியல் மற்றும் சாதி அரசியலுக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com