பிச்சை எடுப்பவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவருக்கு ரூ.500 சன்மானம்! பிச்சைக்காரர்களுக்கு 6 மாதம் சிறை!!

தெலங்கானா மாநிலத்தில் பிச்சைக்காரர்களை எங்காவது பார்த்தால் அல்லது அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்தால் அதைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ.500 சன்மானம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பிச்சை எடுப்பவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவருக்கு ரூ.500 சன்மானம்! பிச்சைக்காரர்களுக்கு 6 மாதம் சிறை!!

தெலங்கானா மாநிலத்தில் பிச்சைக்காரர்களை எங்காவது பார்த்தால் அல்லது அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்தால் அதைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ.500 சன்மானம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தரும் நோக்கில் துவங்கப் பட்ட இந்தத் திட்டம் கடந்த சில காலங்களாகச் செயலற்று இருந்த நிலையில் மீண்டும் இத்திட்டத்தைத் துவக்கி உள்ளது தெலங்கானா அரசு. பிச்சைக்காரர்களைப் பற்றிய தகவல் கிடைத்தவுடன் அந்த இடத்திற்கு விரையும் அரசு அதிகாரிகள் அவர்களை மீட்டுச் சென்று ஹைதராபாத்தில் இருக்கும் மறுவாழ்வு மையத்தில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார்கள்.

தங்களது மாநிலத்தில் ஒரு பிச்சைக்காரர் கூட இல்லை என்ற நிலையை உருவாக்கும் வரை இந்தப் பணி தொடரும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 316 ஆண் பிச்சைக்காரர்களும், 164 பெண் பிச்சைக்காரர்களும் மீட்கப்பட்டு சஞ்சல்குடாவில் இருக்கும் ஆனந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவர்களில் 261 ஆண்களும், 140 பெண்களும் தாங்கள் மீண்டும் பிச்சை எடுப்பதில் ஈடுபட மாட்டோம் என்று உத்திரவாதம் கொடுத்ததைத் தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை எல்லாம் செய்து விடுவித்துள்ளது அரசு. மீதம் இருக்கும் 55 ஆண் மற்றும் 24 பெண் பிச்சைக்காரர்களை தொடர் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ள அரசு பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழியில் தங்களது வாழ் நாளை நகர்த்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.

டிசம்பர் 20-ம் தேதிக்குள் ஹைதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதே தங்களது நோக்கம் என்று இத்திட்டத்தின் பொது இயக்குநர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். அதனால் டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் திருநாள் அன்று மக்கள் மீண்டும் பிச்சைக்காரர்களை எங்காவது பார்த்தால் உடனே அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அப்படி தகவல் தருபவர்களுக்கு ரூ.500 சன்மானமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப் போகிறது. இதற்காகப் பிரத்தியேக தொலைப்பேசி எண்களையும் அரசு அறிவிக்க உள்ளது. 

கடந்த அக்டோபர் 20-ம் தேதி நடைபெற்ற சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு ஹைதரபாத்தில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு உலகம் முழுவதிலும் இருந்து பல முக்கிய தலைவர்களும், அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் அவர்களும் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டின் ஏற்பாடுகளின் ஒன்றாக இத்திடத்தை தெலங்கானா அரசு உருவாக்கியது.

பிச்சைக்காரர்களை மீட்டு அவர்கள் பிச்சை எடுக்க மாட்டோம் என்று உறுதி கூறியதை தொடர்ந்து அவர்களை விடுதலை செய்வதற்கு முன்பு அவர்களது கை ரேகை மற்றும் புகைப்படங்களை அரசு சேகரிக்கிறது. ஒருவேளை வெளியே சென்று மீண்டும் அவர்கள் பிச்சை எடுத்துப் பிடிபட்டால் ‘பிச்சை எடுப்பது தடுப்பு சட்டம் 1977’ இன் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிய பட்டு ஆறு மாதம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com