ஐஏஎஸ், ஐபிஎஸ் போல நீதித் துறைக்கும் தேர்வு முறை

ஐஏஎஸ், ஐபிஎஸ் போல நீதித் துறைக்கும் "இந்திய நீதிப் பணி' என்ற தேர்வு முறையைக் கொண்டு வர, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போல நீதித் துறைக்கும் தேர்வு முறை

ஐஏஎஸ், ஐபிஎஸ் போல நீதித் துறைக்கும் "இந்திய நீதிப் பணி' என்ற தேர்வு முறையைக் கொண்டு வர, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், நாட்டின் உயர் நிலை நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு ஏற்ப, அத்தகைய சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்தினர்.
பெரும்பாலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், இந்தக் கோரிக்கையை வலியுறுத்திக் கூறினர். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று தலைவர்கள் கோரினர்.
இதற்கிடையே, இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்) போல நீதித் துறைக்கும் ஒரு தேர்வு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று சில தலைவர்கள் கருத்து தெரிவித்ததாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றுக்கு நியமிக்கப்படும் நீதிபதிகளில், பெண்கள் மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்களின் விகிதம் ஏற்கவே இயலாத அளவுக்கு மிகக் குறைவாக இருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் அதிக அளவில் கவனம் பெற்றது.
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமின்றி இதர பிற்படுத்தப்பட்ட, முன்னேறிய சமூகத்தினருக்குக் கூட உயர் நிலை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகும் வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து 250 முதல் 300 வரையிலான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் மாறி மாறி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com