கர்நாடகத்தில் குற்றங்கள் அதிகரிப்பு: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறைகூறினார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றத்துக்கான பயண மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அனந்த்குமார், கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றத்துக்கான பயண மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அனந்த்குமார், கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறைகூறினார்.
இது தொடர்பாக பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜகவின் மாற்றத்துக்கான பயண மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது:
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் குற்றச்செயல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து காணப்படுகின்றன. ஹிந்து ஆர்வலர்கள் ருத்ரேஷ், கட்டப்பா, பரேஷ் மேஸ்தா போன்றோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷும் அவரது வீட்டு வாசலிலேயே கொலை செய்யப்பட்டார்.
கர்நாடகத்தை ஆட்சி புரியும் காங்கிரஸ் அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஹிந்து ஆர்வலர்களை கொலை செய்தவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த தீவிர நடவடிக்கை எடுப்போம். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யாரையும் தப்பிக்கவிட மாட்டோம்.
பிரித்தாளும் அரசியலில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் மத உணர்வுகள் தூண்டப்பட்டு, சமுதாயங்கள் பிளவுபடுத்தப்பட்டுள்ளன. மத வன்முறையைத் தூண்டிவிட்டு பயனடைய காங்கிரஸ் நினைக்கிறது.
திப்பு சுல்தான் பிறந்த நாள் ஏன்?: வரலாற்றில் சர்ச்சைக்குரிய திப்பு சுல்தானின் பிறந்த நாள் விழாவை நடத்த காங்கிரஸ் அரசு முற்பட்டது ஏன்? மாநில மக்களை மதரீதியாக பிளவுபடுத்தவே திப்பு சுல்தான் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரமங்கை கித்தூராணி சென்னம்மா அல்லது பொறியாளர் எம்.விஸ்வேஸ்வரையா போன்றவர்களின் பிறந்த நாளை ஏன் கர்நாடக அரசு கொண்டாட முடிவு செய்யவில்லை?
ஊழல்கள் அதிகரிப்பு: நாட்டிலேயே மிகவும் ஊழல் மிகுந்த மாநிலமாக கர்நாடகம் உள்ளது. உருக்குப் பாலம் கட்டுவதில் ஊழல், குப்பை அகற்றுவதில் ஊழல் என பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன.
லோக் ஆயுக்தவை பலவீனப்படுத்தியுள்ளதால், கர்நாடகத்தில் ஊழலுக்கு எதிரான அமைப்பே இல்லாத நிலை உருவாகியுள்ளது. ஊழல்களையும், குற்றச் செயல்களையும் தடுக்க வலுவான நடவடிக்கைகளை காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை.
முதல்வராக எடியூரப்பா பதவியேற்று பாஜக ஆட்சி அமைந்தால், குண்டர்கள், குற்றவாளிகள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்ற உறுதியை அளிக்க விரும்புகிறேன். கர்நாடக அரசின் நிர்பந்தம் காரணமாக நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்ளவோ, ராஜிநாமா செய்யவோ தூண்டப்படுகிறார்கள். கர்நாடகத்தில் இருந்து காங்கிரஸ் ஆட்சியை விரட்ட மக்கள் தயாராகிவிட்டனர் என்றார் அவர். 
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அனந்த் குமார், சதானந்த கெளடா, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com