தேர்தல் பிரசாரத்தில் பிரதமர், முதல்வர்கள் ஈடுபடுவதைத் தடுக்க சட்டம் 

தேர்தல் பிரசாரங்களில் பிரதமர், மாநில முதல்வர்கள் ஆகியோர் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் பிரசாரங்களில் பிரதமர், மாநில முதல்வர்கள் ஆகியோர் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான "சாம்னா'வில் அக்கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்திருப்பதாவது:
குஜராத் தேர்தலின்போது பிரதமர் தொடர்பாக சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்த சேற்றுக்குள் பிரதமர் குதித்ததாலேயே இவ்வாறு நடைபெற்றது. இது தற்போது நிறுத்தப்பட வேண்டும்.
ஆதலால், தேர்தல் பிரசாரங்களில் பிரதமர், மாநில முதல்வர்கள் ஆகியோர் ஈடுபடுவதைத் தடை செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
நமது நாட்டில் நாடாளுமன்றம்தான் மிகப்பெரிய அமைப்பாக செயல்படுகிறது. அங்குதான் ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. எனவே, தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர், மாநில முதல்வர் பதவிகளை வகிப்போர் கலந்து கொள்வதைத் தடை செய்யும் வகையில் சட்டமியற்ற அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.
அரசுக் கருவூலத்தில் இருந்த நிதியில் பெரும்பகுதி காங்கிரஸால் முன்பு கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. அதை எதிர்த்தவர்கள்தான், தற்போது ஆட்சியில் உள்ளனர். எனினும், அரசுக் கருவூலத்தில் கொள்ளையடிக்கப்படுவது மட்டும் நிறுத்தப்படவில்லை. பிரசாரக் கூட்டங்களில் பிரதமர், மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும்போது அவர்களுக்காக அரசு நிதியும், அரசு இயந்திரமும் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களுக்காக செலவிடப்படும் அரசு நிதியை, அவர்கள் சார்ந்த கட்சியிடம் இருந்து வசூலிக்க வேண்டும். அது மன்மோகன் சிங்கோ அல்லது நரேந்திர மோடியோ, யாராக இருந்தாலும் ஒன்றுதான்.
குஜராத்தில் மோடி 40 முதல் 50 தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார். இதற்கு அவர் அரசாங்கத்துக்கு சொந்தமான விமானத்தையும், ஹெலிகாப்டரையுமே பயன்படுத்தினார். பிரதமராக இருந்து கொண்டு, தேர்தல் பிரசாரத்துக்காக கோடிக்கணக்கான அரசுப் பணத்தை அவர் செலவிட்டார். அவருக்கு முன்பு பிரதமர் பதவியிலிருந்தோரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
மத்திய அரசானது, தேர்தல் தொழிற்சாலையாகி விட்டது. குஜராத் தேர்தலுக்குப் பிறகு, கர்நாடகத்துக்கு இன்னும் 3 மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. அதையடுத்து 6 மாதங்களில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்துக்கு தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவது, அதில் எவ்வழியிலும் வெற்றி பெறுவது ஆகியவைதான் தற்போது மத்திய அரசின் கவலையாக உள்ளது. மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலமாகவோ அல்லது பிரதமர், மாநில முதல்வர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் தடை செய்வதன் மூலமாகவோதான், இவை அனைத்துக்கும் முடிவு கட்ட முடியும். இல்லையெனில், அந்தப் பதவிகளை அவர்கள் ராஜிநாமா செய்துவிட்டு, தேர்தலில் தங்களது கட்சிக்காக பிரசாரம் செய்ய வேண்டும் என்று தனது கட்டுரையில் சஞ்சய் ரௌத் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com