நீதித் துறை, கல்வி முறையில் அதிரடி சீர்திருத்தம்: அருண் ஜேட்லி

நமது நாட்டில் நீதித் துறையிலும், கல்வி முறையிலும் அதிரடியான சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.
நீதித் துறை, கல்வி முறையில் அதிரடி சீர்திருத்தம்: அருண் ஜேட்லி

நமது நாட்டில் நீதித் துறையிலும், கல்வி முறையிலும் அதிரடியான சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார். எனினும், எத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை அவர் விரிவாகத் தெரிவிக்கவில்லை.
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் ஞாயிற்றுக்கிழமை சிம்பயோசிஸ் இண்டர்நேஷனல் நிகர்நிலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அருண் ஜேட்லி பேசியதாவது:
நமது நாட்டில் நீதித் துறையும், கல்வி முறையும் காலத்துக்கு ஏற்ப முன்னேற்றம் காணாமல் உள்ளன. இந்த இரு துறைகளிலும் அதிரடியான சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும். கல்வி முறையில் முன்னேற்றம் கண்டால்தான் மாணவர்களை சிறந்த முறையில் அனைத்துத் துறைகளுக்கும் தயார்படுத்த முடியும். அப்போதுதான் இன்றைய மாணவர்கள் நாளை மிகப்பெரிய தலைவர்களாக உருவெடுப்பார்கள். நாட்டில் இப்போது நிலவி வரும் சூழ்நிலையில் அரசு மட்டுமே தனியாக அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தர முடியாது. எனவேதான் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும், தொழில்-வர்த்தகத்தை மேம்படுத்தவும் தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
கடந்த 1991-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள்தான் இப்போது நாட்டின் வளர்ச்சியை இத்தகைய நிலைக்கு உயர்த்தியுள்ளன. தக்கவை தப்பிப் பிழைக்கும், வலுவுள்ளவை மட்டுமே வாழும் என்ற விதி இன்றைய உலகில் பொதுவான விதியல்ல. மாணவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் திறமையை வளர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். ஏனெனில், நமது நாட்டில் அனைத்துத் துறைகளிலும் திறமையானவர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com