பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன்

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளைவிட இந்தியாவில் சிறுபான்மையினரின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன்

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளைவிட இந்தியாவில் சிறுபான்மையினரின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முஸ்லிம் தொழிலாளர் ஒருவரை மற்றொருவர் கோடரியால் வெட்டியும், மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியும் கொலை செய்து, அதன் விடியோ காட்சியை இணையதளத்தில் வெளியிட்டார்.
இந்தச் செயலை, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் செயலோடு ஒப்பிட்டு தஸ்லிமா நஸ்ரீன் கட்டுரை எழுதியிருந்தார். இதன் மூலம், அவர் ஹிந்துக்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளாக சித்திரிப்பதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், இலக்கியத் திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் வந்திருந்த தஸ்லிமா நஸ்ரீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் வசிக்கும் மதச் சிறுபான்மையினரைவிட இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் அதிக உரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் சிறுபான்மையாக உள்ள ஹிந்துக்களும், பெளத்தர்களும் கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். நான் பாகிஸ்தானுக்கு நேரடியாகச் சென்றது கிடையாது. அங்கும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதையும், துன்புறுத்தப்படுவதையும் பற்றி படித்திருக்கிறேன்.
இந்த இரு நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் சிறுபான்மையினரின் வாழ்க்கை மிகச் சிறப்பாகவே உள்ளது. அதற்காக, இந்தியச் சிறுபான்மையினருக்கு பிரச்னைகளே இல்லை என்று நான் கூறவில்லை.
ஐரோப்பிய குடியுரிமை பெற்றிருந்தாலும், இந்தியாவில் வசிக்கும் நான் இந்த நாட்டை எனது சொந்த நாடாகவே உணர்கிறேன். என்னை இங்கே தங்க அனுமதித்த இந்திய அரசுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியச் சமூகத்தின் நன்மைக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன்.
எனது கட்டுரையில், ஒட்டுமொத்த ஹிந்துக்களையே ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்று நான் சொன்னதாக சிலர் கூறுவது முற்றிலும் தவறாகும். ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றியே எனது கட்டுரையில் கருத்து தெரிவித்திருந்தேன். என்மீது இப்படி அபாண்டமாகப் பழி கூறுவது வேதனை அளிக்கிறது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகக் குற்றமிழைத்தவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். ஆனால், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முஸ்லிமைக் கொன்று விடியோவை வெளியிட்டவர் தற்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதான் இரு நாடுகளுக்கும் உள்ள வேறுபாடு ஆகும் என்றார் அவர்.
"லஜ்ஜா' (வெட்கம்) என்ற நாவலை எழுதியதற்காக வங்கதேச மதவாதிகளால் கொலை மிரட்டலுக்குள்ளான தஸ்லிமா நஸ்ரீன், இந்தியாவில் 
தஞ்சமடைந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com