ராகுலுக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பியிருந்த நோட்டீஸை தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டது.
ராகுலுக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பியிருந்த நோட்டீஸை தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டது.
குஜராத் மாநில சட்டப் பேரவைக்கு அண்மையில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான இரண்டாம் கட்டப் பிரசாரம் முடிவடைந்த பிறகு ராகுல் காந்தி சில தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டியளித்தார். அதேபோல், பிரசாரம் முடிவடைந்த பிறகு ஃபிக்கி எனப்படும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சில கருத்துகளைத் தெரிவித்தார். 
ராகுலின் பேட்டி தேர்தல் நடத்தை விதிமீறல் என்று காங்கிரஸாரும், பிரதமரின் கருத்துகள் தேர்தல் நடத்தை விதிமீறல் என்று பாஜகவினரும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இது பற்றி விசாரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் 1951-ஆம் ஆண்டைய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126-ஆவது பிரிவின் கீழ் விதிகளை மீறியது தொடர்பாக விளக்கமளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அந்தப் பிரிவானது வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேரத்தில் எந்த வகையிலும் பிரசாரம் செய்வதைத் தடுப்பது தொடர்பானதாகும்.
இந்நிலையில், அந்த நோட்டீஸை திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "டிஜிட்டல் மற்றும் மின்னணு ஊடகங்களின் பல்முனை வளர்ச்சி காரணமாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126-ஆவது பிரிவை தற்போதைய காலகட்டத்தின் சவால்கள் மற்றும் தேவைக்கேற்ப மறு பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. எனவே, அப்பிரிவு தொடர்பாக மறு ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க ஒரு குழுவை அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது' என்று தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி: இதனிடையே, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்துக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
ராகுல் காந்திக்கு அனுப்பிய நோட்டீஸை தேர்தல் ஆணையம் திரும்பப் பெறுகிறது என்றால் அது தொடர்பாக இரண்டு கேள்விகள் எழுகின்றன. அதாவது, சம்பந்தப்பட்ட நோட்டீஸானது அவர் அளித்த பேட்டிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாமல் தடுப்பதற்கான தந்திரம் மட்டும்தானா? 
அடுத்ததாக, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அல்லது வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதை நியாயப்படுத்தவே ராகுலுக்கு அனுப்பிய நோட்டீஸ் வாபஸ் பெறப்படுகிறதா? என்று சுர்ஜேவாலா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com