கிழக்கு முகம் பார்வை திருப்பிய பிரதமர்

வடகிழக்கு மாநிலங்களுக்கான வளர்ச்சி தொடர்பான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.
கிழக்கு முகம் பார்வை திருப்பிய பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ள மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.

முதலாவதாக மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலில், துய்ரியல் நீர்மின் நிலையத்தை துவக்கி வைத்தார். இதன்மூலம் அங்கு 251 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி ஏற்படுத்தப்படவுள்ளது. இதனால் அம்மாநிலத்துக்கான மின் தேவை மட்டுமல்லாது அதன்மூலம் வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்படும்.

அதுமட்டுமல்லாது மிசோரம் மாநிலத்தில் வெற்றிகரமாக துவங்கி செயல்படுத்தப்பட்ட முதல் மத்திய அரசு திட்டம் என்ற சிறப்பையும் இது பெற்றுள்ளது. இந்த திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்த திட்டம் கடந்த 1998-ம் வருடம் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அடுத்து மத்தியில் ஏற்பட்ட காங்கிரஸ் அரசாங்கத்தால் இந்த திட்டம் தாமதப்படுத்தப்பட்டது. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் சிக்கிம் மற்றும் திரிபுராவுக்கு அடுத்து வடகிழக்குப் பகுதியில் 3-ஆவது மின் மிகை மாநிலமாக மிசோரம் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மேகாலயா சென்றடைந்த பிரதமர், அம்மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை துவக்கி வைத்தார். மேகாலயா தலைநகர் ஷில்லாங் சென்றவர் அங்கு, தேசிய நெடுஞ்சாலை 127 பி-யில் 261 கிலோ மீட்டர் தூரம் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை துவக்கினார்.

இதன்மூலம் 16 மணிநேரங்கள் வரை பயணிக்கக்கூடிய பயணநேரம் பாதியாக குறைக்கப்பட்டு 8 மணி நேரமாக ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த சாலை திட்டத்தின் மூலம் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதுமட்டுமல்லாமல் ஷில்லாங் மற்றும் துரா நகரங்களுக்கு இடையில் நேரடி தொடர்பு ஏற்படும். சாலை மார்கத்தில் மேகாலயாவுக்கு எளிதில் பயணிக்க முடியும். இதனால் சுற்றுலா வளர்ச்சி அடையும். 

வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தையும் இணைக்கும் விதமாக சாலை திட்டத்துக்காக ரூ.60 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் அடுத்த 3 வருடங்களில் பாரத் மாலா திட்டத்தின் கீழ் இதனை செயல்படுத்த ரூ.30 ஆயிரம் கோடி முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 3,800 கிலோ மீட்டர் சாலைகளை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது வரை ரூ.3,200 கோடி செலவில் 1,200 கிலோ மீட்டர் சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 1,325 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.4,700 கோடி செலவில் புதிதாக 15 ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளது என்றார். 

இதையடுத்து, மேகாலயாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சித் தொண்டர்களிடையே பரப்புரை செய்தார்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com