மருத்துவ மேற்படிப்பில் கூடுதலாக 5,800 இடங்கள்

நடப்பு ஆண்டில் மருத்துவ மேற்படிப்பில் கூடுதலாக 5,800-க்கும் மேற்பட்ட இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

நடப்பு ஆண்டில் மருத்துவ மேற்படிப்பில் கூடுதலாக 5,800-க்கும் மேற்பட்ட இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் செளபே கூறியதாவது:
நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. நாட்டில் மொத்தம் 479 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 67,352 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் 13,004 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சிறப்பு மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டில் இதுவரை 5,800 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. 20 மாநிலங்களில் உள்ள 58 மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 
புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான மருத்துவக் கல்வியாளர்கள், பணியாளர்கள், படுக்கை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் தேவைக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2015 ஜனவரி முதல் 2017 டிசம்பர் 14-ஆம் தேதி வரை 5,541 புதிய மருந்துப் பொருள்கள் சோதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய புதிய மருந்துகள் சோதனை பதிவு மையத்தில் இருந்து இத்தகவல் பெறப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com