ஆதர்ஷ் ஊழலில் அசோக் சவான் பெயரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

போதிய ஆதாரமில்லாததால் ஆதர்ஷ் ஊழல் குற்றப்பத்திரிகையில் இருந்து முன்னாள் முதல்வர் அசோக் சவான் பெயரை நீக்குமாறு மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஆதர்ஷ் ஊழலில் அசோக் சவான் பெயரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மஹாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், கடந்த 2008 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் அம்மாநில முதல்வராக பதவி வகித்தார். அப்போது ராணுவ வீரர்களுக்கென வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் ஊழலில் ஈடுபட்டதற்காக பின்னர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த திட்டத்தின் அடிப்படையில் அனைத்து குடியிருப்புகளும் ராணுவ வீரர்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக தனது முதல்வர் பதவியைப் பயன்படுத்தி 40 சதவீதத்தினை சாதாரண குடிமக்களுக்கு ஒதுக்கீடு செய்தும், 2 அடுக்குமாடி குடியிருப்புகளை தனது உறவினர்களுக்கு வழங்கியும் ஊழலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அப்போது மஹாராஷ்டிர ஆளுநராக இருந்த வித்தியாசாகர் ராவ், இந்திய அரசியலமைப்பு சட்ட விதி எண் 120 மற்றும் 420 ஆகியவற்றின் அடிப்படையில் அசோக் சவான் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய ஒப்புதல் வழங்கினார்.

இதனை எதிர்த்து கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் அசோக் சவான் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக நீதிபதிகள் ரஞ்சித் மோரே மற்றும் சாதனா ஜாதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதில்,

ஆதர்ஷ் ஊழல் வழக்கின் குற்றப்பத்திரிகையில் இருந்து மஹாராஷ்டிர காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான அசோக் சவான் பெயரை உடனடியாக நீக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ போதிய ஆதரங்களை சமர்பிக்கத் தவறியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டத்தை அமல்படுத்தியது தன்னாட்சி கொண்ட அமைப்பு. எனவே, அது வெளிநபர்களால் தனது செயல்பாட்டினை பாதிக்க அனுமதித்திருக்கக் கூடாது என்று கூறி நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com