ஹிமாசலப் பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாக்குர் பதவியேற்பு! 

ஹிமாசலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ஜெய்ராம் தாக்குர் வண்ணமயமான விழா ஒன்றில் புதன்கிழமை பொறுப்பேற்றார்.
ஹிமாசலப் பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாக்குர் பதவியேற்பு! 

ஷிம்லா: ஹிமாசலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ஜெய்ராம் தாக்குர் வண்ணமயமான விழா ஒன்றில் புதன்கிழமை பொறுப்பேற்றார்.

68 இடங்களைக் கொண்ட ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 44 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. எனினும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான பிரேம்குமார் துமல் தாம் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியைத் தழுவினார். இதனால் புதிய முதல்வரைத் தேர்வு செய்வதில் சுமார் ஒரு வார காலமாக இழுபறி நிலவியது.

இறுதியில் ஜெய்ராம் தாக்குர் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத்தைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆளுநரும் ஆட்சி அமைக்க வருமாறு தாக்குருக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், ஹிமாசலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக ஜெய்ராம் தாக்குர் புதன்கிழமை பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த வண்ணமயமான விழாவானது சிம்லாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரிட்ஜ் மைதானத்தில் பகல் 11 மணிக்கு நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி, தாவர்சந்த் கெலாட், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சௌஹான், ரமண் சிங், வசுந்தரா ராஜே, மனோகர் லால் கட்டர், திரிவேந்திர சிங் ராவத், விஜய் ரூபானி, தேவேந்திர ஃபட்னவீஸ், ரகுவர் தாஸ், பெமா காண்டு , என்.பீரேன் சிங், சர்வானந்த சோனோவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏறத்தாழ 30000 பாஜக தொண்டர்கள் இந்த  நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். அவர்களுடன் முதல்வர் ஜெய்ராம் தாக்குரின் 80 வயதான தாயாரும் நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது  

பதவியேற்பு விழாவை முன்னிட்டு சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானம், ஆனந்தலே ஹெலிபேட், ஜப்பார்ஹட்டி விமான நிலையம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரிட்ஜ் மைதானம் முழுவதும் பாஜக கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com