பாகிஸ்தான் தூதரகத்திற்கு ஒரு ஜோடி செருப்புகளை அனுப்பிய பாரதிய ஜனதா தலைவர்! 

பாகிஸ்தானில் சிறையிலுள்ள இந்தியரான குல்பூஷண் ஜாதவைச் சந்திக்கச் சென்ற அவரது மனைவி மற்றும் தாயார் நடத்தப்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தில்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு.
பாகிஸ்தான் தூதரகத்திற்கு ஒரு ஜோடி செருப்புகளை அனுப்பிய பாரதிய ஜனதா தலைவர்! 

புதுதில்லி: பாகிஸ்தானில் சிறையிலுள்ள இந்தியரான குல்பூஷண் ஜாதவைச் சந்திக்கச் சென்ற அவரது மனைவி மற்றும் தாயார் நடத்தப்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தில்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு பாரதிய ஜனதா தலைவர் ஒருவர்,  ஒரு ஜோடி செருப்புகளை ஆனலைனில் ஆர்டர் செய்துள்ளார்.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதையடுத்து, சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா அணுகியது. இந்த விவகாரத்தில் தாங்கள் இறுதி முடிவு எடுக்கும் வரை, ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து, ஜாதவுக்கு தூதரக ரீதியிலான உதவிகளை வழங்க அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஜாதவ் திரட்டிய உளவுத் தகவல்களைப் பெறவே, அவரை அணுக இந்தியா முயற்சிக்கிறது என்று கூறி பாகிஸ்தான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே, ஜாதவை சந்திப்பதற்கு, இந்தியாவிலுள்ள அவரது குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது. அதன்பேரில், பாகிஸ்தானுக்கு கடந்த திங்கள்கிழமை சென்ற ஜாதவின் மனைவியும் தாயாரும், இஸ்லாமாபாதில் உள்ள அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் கண்ணாடித் தடுப்புக்கு இடையே அவரை சந்தித்துப் பேசினர். இந்த நிகழ்வு முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டது.

சந்திப்புக்கு முன்னதாக, ஜாதவ் மனைவி அணிந்திருந்த தாலி, வளையல், நெற்றிப் பொட்டு ஆகியவற்றை, பாகிஸ்தான் அதிகாரிகள் அகற்றச் செய்துள்ளனர். இதையடுத்து இந்தியாவின் கலாசார, மத உணர்வுகளை பாகிஸ்தான் அவமதித்துவிட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.

இந்நிலையில், ஜாதவ் மனைவி அணிந்திருந்த காலணியில் சந்தேகத்துக்கு இடமான உலோகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனால் அந்த காலணியை தடயவியல் சோதனைக்கு பாகிஸ்தான் அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது. காலணி தவிர இதர நகைகள், ஜாதவ் மனைவியிடம் அளிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த விவகாரம் இந்தியாவில் கடும் சர்ச்சையினை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக வியாழன் அன்று நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் குல்பூஷண் ஜாதவைச் சந்திக்கச் சென்ற அவரது மனைவி மற்றும் தாயார் நடத்தப்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தில்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு, தில்லி பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் தஜிந்தர் பக்கா ஒரு ஜோடி செருப்புகளை ஆனலைனில் ஆர்டர் செய்துள்ளார். அதற்கான விபரங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் அவர் ஒரு செய்தியினையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தானுக்கு நமது செருப்புகள் தேவைப்படுகின்றன. அவர்களுக்கு நமது செருப்புகளை அனுப்புவோம். நாம் எல்லோரும் அவர்களுக்கு ஒரு ஜோடி செருப்புகளை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆன்லைனில் செருப்புகளை ஆர்டர் செய்த பின்னர் விபரங்களை இங்கே பகிருங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com