ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம்: மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய வழக்கில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன்
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம்: மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய வழக்கில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதாரர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை சுமத்திய குற்றச்சாட்டுகளை தில்லி சிபிஐ நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.

ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கியதும் அதற்கு கைமாறாக தயாநிதி மாறனின் சகோதாரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டைரக்ட் டிவி நிறுவனத்தில் சுமார் ரூ.724 கோடி அளவுக்கு மேக்சிஸ் நிறுவனம் அதன் துணை நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்ததாகக் கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து, 2007-இல் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவன உரிமையாளரும் மலேசியாவாழ் வம்சாவளி இந்தியரான டி. அனந்தகிருஷ்ணன், மேக்சிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ரால்ஃப் மார்ஷல் மீதும் சன் டைரக்ட் டிவி, மேக்சிஸ் நிறுவனம், செüத் ஏசியா எஃப்எம் நிறுவனம் ஆகியவை மீதும் சிபிஐ வழக்குத் தொடுத்தது.
இது கோடிக்கணக்கான நிதிப் பரிவர்த்தனை தொடர்புடைய விவகாரம் என்பதால், மத்திய அமலாக்கத் துறை தனியாக வழக்குத் தொடுத்தது. அதில், சிபிஐ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் சேர்த்து, கலாநிதி மாறனின் மனைவி காவேரி, சௌத் ஏசியா எஃப்எம் நிறுவன மேலாண் இயக்குநர் சண்முகம் ஆகியோரும் குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டனர்.
இந்த இரு வழக்குகளும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தை விசாரித்து வரும் தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்நிலையில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன், செüத் ஏசியா எஃப்எம் மேலாண் இயக்குநர் சண்முகம் ஆகியோர் சார்பில் சிபிஐ நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் இருந்து தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தனியாக மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி நிறைவடைந்து உத்தரவு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்புடைய ஆவணங்கள் ஏராளமாக இருப்பதால், சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி பிறப்பிக்கவிருந்த உத்தரவு, கடந்த டிசம்பர் 19, 22, ஜனவரி 9,18, 24 ஆகிய தேதிகளில் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.
உத்தரவு: இந்நிலையில், இந்த மனுக்கள் மீது சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு வருமாறு: அலுவல் ரீதியான கோப்புகளைத் தவறாக புரிந்து கொண்டது, ஏர்செல் நிறுவனத்தின் ஆரம்பகால உரிமையாளர் சி. சிவசங்கரன் மற்றும் சாட்சிகளின் முரண்பாடான சாட்சியம் ஆகியவை ஊகங்கள் அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. எனவே, குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவர் மீதான குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன் கருத்து: சிபிஐ நீதிமன்ற உத்தரவு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறுகையில், "இந்திய நீதிமன்றம் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக நானும் எனது குடும்பத்தினரும் இந்த வழக்குகளால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினோம். இந்த உத்தரவு அந்த இன்னல்களை போக்குவதாக அமைந்துள்ளது' என்றார்.


மேல்முறையீடு செய்ய அமலாக்கத் துறை முடிவு

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் மாறன் சகோதர்கள் மீது பதிவான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்று கூறிய சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி, அதனை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிகிறது. மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகளையும், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை புகார்களையும் அமலாக்கத் துறை தனியே விசாரித்து, சில முறைகேடுகளைக் கண்டறிந்ததைக் காரணமாகக் காட்டி மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாற்காலிக நிவாரணம் மட்டுமே

சிபிஐ நீதிமன்ற உத்தரவு குறித்து மாநிலங்களவை பாஜக உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் ரத்து செய்திருந்தாலும் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இயலும். இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்களிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நான் தொடுத்துள்ள வழக்கு வெள்ளிக்கிழமை (பிப்.3) விசாரணைக்கு வருகிறது. எனவே, சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவு சம்பந்தப்பட்டவர்களுக்கு தாற்காலிக நிவாரணம் மட்டுமே' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com