சட்டவிரோதமாக குடியேறியவர்களின் வாரிசுகள் இந்தியர்களா? மே 11-இல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் வாரிசுகளுக்கு குடியுரிமை வழங்கலாமா? கூடாதா? என்பது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மே 11-ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு
சட்டவிரோதமாக குடியேறியவர்களின் வாரிசுகள் இந்தியர்களா? மே 11-இல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் வாரிசுகளுக்கு குடியுரிமை வழங்கலாமா? கூடாதா? என்பது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மே 11-ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது.
இதைத் தவிர, இஸ்லாமிய திருமண மற்றும் விவாகரத்து நடைமுறைகளில் உள்ள சர்ச்சைகள் தொடர்பாகவும், அந்த அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு ஊடுருவி வரும் பலர், அஸ்ஸாம் போன்ற எல்லையோர மாநிலங்களில் குடியேறி வருவது தொடர்கதையாக உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்ட விதி 6-ஏ பிரிவில், 1966-ஆம் ஆண்டு முதல் 1971 மார்ச் 24-ஆம் தேதி வரை நம் நாட்டுக்குள் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதி பாரபட்சமானது என்றும், இச்சட்டப் பிரிவு அரசியல் சாசனப்படி செல்லுபடியாகாது என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனிடையே, சட்டவிரோதமாக குடியேறிய பிறகு சம்பந்தப்பட்டவர்கள் இந்தியாவில் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாகவும் பல கேள்விகள் எழுந்தன.
இதுதொடர்பாக பல்வேறு பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் தகவல்களைத் திரட்டுவதற்காக மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை மீண்டும் அவர்களது தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்தச் சூழலில், சட்டவிரோதமாக குடியேறிவர்களின் வாரிசுகளுக்கான குடியுரிமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மே மாதம் முதல் ஜூலை வரை விடுமுறைக் கால நீதிமன்றம் செயல்படும். அந்நீதிமன்றத்தில், நான்கு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு இந்த விவகாரம் அனுப்பப்படுகிறது.
வங்கதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்து அஸ்ஸாம் மாநிலத்தில் குடியேறியுள்ளவர்களின் வாரிசுகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது தொடர்பான மனுக்களை மே 11 முதல் ஜூலை 1 வரை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.
இதைத்தவிர, "தலாக்' விவாகரத்து நடைமுறை குறித்தும் அந்த அமர்வு முன்பு விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com