ஆபாசப் படங்களைத் தடுக்க முடியாதா? 'கூகுள்' நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

இணையதளங்களில் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்வதைத் தடுக்க முடியாதா? என்று "கூகுள்' நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளது.

இணையதளங்களில் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்வதைத் தடுக்க முடியாதா? என்று "கூகுள்' நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளது.
இணையதளங்களில் அதிக அளவில் ஆபாசப் படங்கள் பரவுவதைத் தடுக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோகுர், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது "கூகுள்' நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டதாவது:
இணையதளங்களில் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்படுதவற்கு எதிரான நடவடிக்கைகளில் நிபந்தனையின்றி ஒத்துழைப்பு வழங்க "கூகுள்' நிறுவனம் தயாராக உள்ளது. அத்தகைய படங்களோ, விடியோ காட்சிகளோ "கூகுள்' வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது கவனத்துக்குக் கொண்டுவரப்படும் பட்சத்தில், 36 மணி நேரத்துக்குள் அவை நீக்கப்படும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஒருவேளை ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை "கூகுள்' நிறுவனமே தாமாக கண்டறிந்து அதைத் தடுக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், இதுபோன்ற சமூகத்தை சீரழிக்கும் விடியோக்களை பதிவேற்ற இயலாதபடி தடுத்து நிறுத்த எத்தகைய வழிமுறைகளை பின்பற்றுகிறீர்கள்? என்றும் அவர்கள் கேட்டனர். அதற்கு அபிஷேக் மனு சிங்வி பதிலளித்ததாவது:
தாமாக கண்டறிந்து ஆபாச விடியோக்களை நீக்குவது நடைமுறையில் சாத்தியமல்ல. சம்பந்தப்பட்ட படங்கள் தொடர்பான விவரங்களை "கூகுள்' நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தால் மட்டுமே அவற்றைத் தடை செய்ய முடியும் என்றார்.
இதைத்தொடர்ந்து மனு மீதான விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com