உ.பி.யில் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சியோடும் கூட்டணி இல்லை: அமித் ஷா

உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தொங்கு சட்டப்பேரவை உருவானாலும் பகுஜன் சமாஜ் கட்சியுடனோ, வேறு எந்தக் கட்சியுடனோ பாஜக கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா
உ.பி.யில் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சியோடும் கூட்டணி இல்லை: அமித் ஷா

உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தொங்கு சட்டப்பேரவை உருவானாலும் பகுஜன் சமாஜ் கட்சியுடனோ, வேறு எந்தக் கட்சியுடனோ பாஜக கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு முழு பெரும்பான்மை கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தின் தேர்தல் வெற்றி, வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை பாஜக கைப்பற்றியது. அதேபோல், தற்போது நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் அதிக இடங்களைக் கைப்பற்றும் முனைப்போடு பாஜக தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஆனால், சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணி, மாயாவதி பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை பாஜகவுக்கு கடும் சவாலாக உள்ளன. இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, வாராணசியில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தார். அப்போது, ""உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், பகுஜன் சமாஜ் கட்சியுடனோ அல்லது வேறு எந்தக் கட்சியுடனோ இணைந்து பாஜக ஆட்சியமைக்குமா?'' என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ""எந்தக் கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கே இடமில்லை'' என்று அமித் ஷா பதிலளித்தார். அவர் மேலும் கூறியதாவது: தற்போது நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், பஞ்சாபில் அகாலி தளம்-பாஜக கூட்டணி, காங்கிரஸ், ஆத் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுவதால் வெற்றியை யூகிப்பது சிரமமாக உள்ளது.
உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில், முதல்வர் பதவி வேட்பாளரை பாஜக முன்கூட்டியே அறிவிக்காதது, கட்சியின் தேர்தல் உத்தியாகும். புதிய முதல்வரை கட்சியின் எம்எல்ஏக்களும், நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களும் கூடி தேர்வு செய்வார்கள்.
மாநிலத்தில் ஹிந்து, முஸ்லிம் சமூகத்தினர் 80:20 என்ற விகிதத்தில் உள்ளனர். ஆனால், அவர்களுக்கான இடுகாடு, சுடுகாடு ஆகியவற்றை அமைப்பதற்காக, ரூ.1,200 கோடியை ஆளும் சமாஜவாதி அரசு சமமாகப் பிரித்துக் கொடுத்துள்ளது. மாநிலத்தில் ஒரு பிரிவினரை சாந்தப்படுத்தும் அரசியலில் சமாஜவாதி அரசு ஈடுபட்டுள்ளது என்று அமித் ஷா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com