நிலுவை ரயில் திட்டங்கள் நிறைவேறுவதில் இழுபறி!

தமிழகத்தில் மத்திய - மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து நிறைவேற்ற உத்தேசிக்கப்படும் ரயில் திட்டங்களுக்கான நிலம் ஒதுக்கும் விவகாரத்தில் மாநில அரசு முன்மொழிந்த யோசனையை ரயில்வே அமைச்சகம் நிராகரித்துள்ளது.
நிலுவை ரயில் திட்டங்கள் நிறைவேறுவதில் இழுபறி!

தமிழகத்தில் மத்திய - மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து நிறைவேற்ற உத்தேசிக்கப்படும் ரயில் திட்டங்களுக்கான நிலம் ஒதுக்கும் விவகாரத்தில் மாநில அரசு முன்மொழிந்த யோசனையை ரயில்வே அமைச்சகம் நிராகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நிலுவை ரயில் திட்டங்கள் நிறைவேறுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
முதல்வர் கடிதம்: இது தொடர்பாக தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், "ரயில் பாதை அமைக்கும் திட்டங்களுக்கான நிலம் ஒதுக்கும் போது, அதை தமிழக அரசின் பங்கு மூலதனமாக சந்தை அடிப்படையில் அங்கீகரிக்க வேண்டும் அல்லது மத்திய அரசுக்குச் சொந்தமான நிலமாக வழங்க வேண்டும்' என்று ஜெயலலிதா கோரியிருந்தார்.
இக்கோரிக்கையை ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி அண்மையில் பதவியேற்றார். இதையடுத்து, முந்தைய முதல்வர்கள் விடுத்திருந்த நிலுவைத் திட்ட கோரிக்கை தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு ரயில்வே வாரியச் செயல் இயக்குநர் சி.வி.ராமன் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 21) கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் ரயில்வே அமைச்சக உயரதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
9 மாநிலங்கள்: நாடு தழுவிய அளவில் ரயில்வே திட்டங்களை மாநில அரசுகளுடன் சேர்ந்து செயல்படுத்தும் நோக்குடன் பல மாநிலங்களுடன் ரயில்வே அமைச்சகம் கூட்டு உடன்படிக்கை செய்து வருகிறது. மகாராஷ்டிரம், குஜராத், ஒடிஸா, ஹரியாணா, சத்தீஸ்கர், கர்நாடகம், கேரளம், ஜார்க்கண்ட் ஆகிய ஒன்பது மாநிலங்கள் இதுவரை ரயில்வேயுடன் இந்த உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளன.
தமிழகத்தைப் பொருத்தவரையிலும் கூட்டு உடன்படிக்கை செய்து கொள்வதற்காக முன்மொழியப்பட்ட யோசனை இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இந்த உடன்படிக்கை தொடர்பான போதிய புரிந்துணர்வுடன் தமிழக அரசு செயல்படவில்லை. எனவேதான் திட்டத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தி தமிழகத்தின் தற்போதைய முதல்வருக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 21) கடிதம் எழுதியுள்ளார்.
திட்டத்தின் நோக்கம்: இந்தத் திட்டத்தின்படி, நிலுவை ரயில் பாதைத் திட்டங்களை மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த உடன்பட்டால், 51 சதவீத நிதியை மாநில அரசும் 49 சதவீதத்தை மத்திய அரசும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதில் மாநில அரசு நிலம் வழங்கிய பிறகு, அதற்குரிய சந்தை மதிப்புத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோருகிறது. மாநில அரசு வழங்கும் நிலத்தில் அரசுக்குச் சொந்தமான நிலம் எதுவாக இருந்தாலும், அந்த நிலத்துக்குரிய தொகையை மாநிலத்தின் பங்காக கருத திட்டத்தில் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்த நிலத்துக்குரிய தொகையை மத்திய அரசு அளிக்காது. இந்த நிதிப் பகிர்வு முறையை மாநில அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக ரயில் திட்டத்தில் புதிய பணிகள் சேர்ப்பு

தெற்கு ரயில்வே மூலம் 2017-18 நிதியாண்டு பட்ஜெட் பணிகளில் சேலம் மேக்னசைட் சந்திப்பு - ஒமலூர் இடையே 11 கி.மீ. தொலைவுக்கான ரயில் பாதையை ரூ.76.43 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், "விழுப்புரம் - கடலூர் துறைமுகம் - மயிலாடுதுறை - தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை - திருவாரூர் இடையிலான மொத்தம் 228 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டத்தை ரூ.251.33 மதிப்பீட்டிலும், ஓசூர் வழியாக பெங்களூரு - ஓமலூர் இடையிலான 196 கி.மீ. தொலைவு பாதை மின்மயமாக்கலை ரூ.153 கோடி மதிப்பீட்டிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.


உணவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

ரயில்களில் பயணிகளிடம் உணவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சக கூடுதல் தலைமை இயக்குநர் அனில் சக்úஸனா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: ரயில்களில் நிர்ணயிக்கப்பட்ட உணவு, சேவைகளுக்கான கட்டணத்தின் விவரம் ரயில் பெட்டிகளில் பொதுவான இடத்தில் பார்வையிடும் வகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதை மீறி யாரேனும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அக்கும்பல் பற்றி ரயில்வே அமைச்சகத்துக்கு அதன் அதிகாரப்பூர்வ சுட்டுரை (டுவிட்டர்), மின்னஞ்சல், செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலம் பயணிகள் புகார் தெரிவித்தால் உடனுக்குடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும்,தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு நீண்ட தொலைவுக்கு இயக்கப்படும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வாய்ப்பை ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com