நீதித் துறை சீர்திருத்தத்துக்கு இதுவே சரியான தருணம்: பிரணாப் முகர்ஜி

நீதித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இதுவே சரியான தருணம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. உடன், உச்ச நீதிமன்றத் தலைமை நீத
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. உடன், உச்ச நீதிமன்றத் தலைமை நீத

நீதித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இதுவே சரியான தருணம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் "நீதித் துறை சீர்திருத்தங்கள் - தற்கால உலகின் வளர்ச்சி' என்ற தலைப்பிலான புத்தக வெளியிட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட, பிரணாப் முகர்ஜி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
நமது நாட்டின் நீதித் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. நீதித் துறையில் பல்வேறு முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
என்னைப் பொருத்தவரையில் சீர்திருத்தம் என்பது ஒரு தொடர் நிகழ்வாகும். அதனை நிறுத்துவது, பின்னர் தொடங்குவது என்பதெல்லாம் கிடையாது. ஒவ்வொரு துறையும் கால மாற்றத்துக்கு ஏற்ப தன்னை மேம்படுத்தி வருகிறது.
சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியுள்ள தல்வீர் பண்டாரி எழுதிய இந்தப் புத்தகம் நீதித் துறை சீர்திருத்தங்கள் குறித்து கூறுகிறது. நமது நாட்டில் நீதித் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள இதுதான் சரியான தருணம் என்றார் அவர்.
மத்திய அரசு நடவடிக்கை: நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
சிறப்பான நிர்வாகத்தின் மூலம் நீதித் துறையின் சுமையை வெகுவாகக் குறைக்க முடியும். நீதித் துறை அமைப்பை தூய்மைப்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசு இதுவரை 1,200 சட்டங்களை மாற்றியமைத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கேஹர், விரைவாக முடிவுகளை எடுத்து வருகிறார். அவரது இந்தச் செயல்பாடு என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சட்டப் பல்கலைக்கழங்களும் இந்த வளர்ச்சியில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
"வழக்குகளை அரசு குறைக்க வேண்டும்': உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கேஹர் பேசியதாவது: அதிக அளவு வழக்குகள் நிலுவையில் இருப்பதற்காக நீதிமன்றத்தை யாரும் குறை கூறக் கூடாது. அதிக வழக்குகளைத் தொடுப்பதை அரசின் பல்வேறு துறைகளும் குறைத்துக் கொள்ள வேண்டும். இப்படிக் கூறுவதால் நான் அரசைக் குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். அரசுத் தரப்பு வழக்குகள்தான் நீதிமன்றத்தில் அதிகம் உள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com