சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடுங்கள்: குடியரசுத் தலைவரிடம் திமுக கோரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் ஆளும் அதிமுகவிற்கு உண்மையிலேயே பெரும்பான்மை உள்ளதா என்பதை அறிய ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிட மாநில ஆளுநரை கேட்டுக் கொள்ள வேண்டும்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வியாழக்கிழமை சந்தித்து மனு அளிக்கும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வியாழக்கிழமை சந்தித்து மனு அளிக்கும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளும் அதிமுகவிற்கு உண்மையிலேயே பெரும்பான்மை உள்ளதா என்பதை அறிய ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிட மாநில ஆளுநரை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
20 நிமிட சந்திப்பு: இது தொடர்பாக தில்லியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தலைவர்கள் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பேரவை திமுக உறுப்பினர் துரைமுருகன் உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பின் போது உடனிருந்தனர். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய வன்முறை அண்மையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வின் போது அரங்கேறியது.
திமுகவைச் சேர்ந்த 89 சட்டப்பேரவை உறுப்பினர்களை வெளியே இருந்து வரவழைக்கப்பட்ட இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) மற்றும் மாநில காவல் பணியில் உள்ள அதிகாரிகள் மூலம் அந்தக் கொடுமையை ஆளும் கட்சிக்கு சாதகமாகவும், சட்டவிரோதமாகவும் அவையை நடத்திய சட்டப்பேரவைத் தலைவர் தனபால் நடத்தினார். அந்நிகழ்வு பற்றி குடியரசுத் தலைவரிடம் தெளிவாக எடுத்துக் கூறி ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கினோம்.
முன்மாதிரி நிகழ்வுகள்: இந்தியாவில் உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நடைமுறையை முன்மாதிரியாகக் கொண்டு தமிழக சட்டப்பேரவையிலும் தற்போதுள்ள அதிமுக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில ஆளுநரிடம் வலியுறுத்தினோம். அம்முயற்சி உரிய பலனை அளிக்கவில்லை. இந்த முன்மாதிரி நிகழ்வுகளை மேற்கோள்காட்டி ரகசிய வாக்கெடுப்பை நடத்த பேரவைத் தலைவருக்கு மாநில ஆளுநர் உத்தரவிடுமாறும், வாக்கெடுப்பை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரை கேட்டுக் கொண்டோம். இந்த நிகழ்வுகள் பற்றி முறையாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.
திமுகவின் நிலைப்பாடு: திமுக பற்றி விமர்சிக்கும் அதிமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தினகரனுக்கு எல்லாம் பதில் சொல்ல நாங்கள் விரும்பவில்லை. அதிமுகவில் தினகரனின் தலைமையை ஏற்க முடியாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அறிவித்துள்ளது அக்கட்சியின் சொந்தப் பிரச்னை; உள்கட்சி விவகாரம். இதில் திமுக தேவையின்றி தலையிடாது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தற்போதுதான் ஒவ்வொருவராக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை நெருக்கடியால் ராஜிநாமா செய்து விட்டு ஜெயலலிதா சமாதியில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறினார். இந்தச் சந்தேகத்தை ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து திமுக எழுப்பி வந்தது. அவர் மரணம் அடைந்த பிறகும் அது பற்றி விசாரிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியது.
விரைவில் திமுக ஆட்சி: முதல்வராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமி ஐந்து முக்கிய உத்தரவுகளுக்கான கையெழுத்தை போட்டுள்ளார். ஆறாவது கையெழுத்தாக ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சிக்கு வரும் என மட்டும் என்னால் கூற முடியும் என்றார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com